20 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோவிலுள்ள ஷெல்டிக் பார்க் பகுதியில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான மெய்வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வை 40,000 மக்கள் நேரடியாகவும் தொலைகாட்சி ஊடாக ஒரு பில்லியன் மக்களும் கண்டு களித்துள்ளனர்.
2,000 பேர் பங்கேற்ற நேரடி நிகழ்ச்சியை தொடர்ந்து விளையாட்டரங்கில் பாரம்பரிய அணி வகுப்பும் இடம்பெற்றுள்ளது.
பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான கோலில் இருந்த தனது செய்தியை வாசித்து பிரித்தானிய மகாராணி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் பொதுநலவாய போட்டிகளுக்கான தலைவரான எலிசபெத் மகாராணி போட்டிகளில் பங்கேற்கவுள்ள மெய்வல்லுநர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய போட்டிகளுக்கான மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் பொதுநலவாய நாடுகளில் 288 நாட்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மைல் தூரம் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பமாகி ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் 17 வகையான போட்டிகளில் சுமார் 4,500 மெய்வல்லுநர்கள் பங்கேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply