க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக தேசிய
அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு
அடையாள அட்டைகளை தாமதமின்றி விநியோகிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்
எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.
வருடாந்தம் சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் க.பொ.த
சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் நோக்கில் தேசிய அடையாள அட்டையைப்
பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
எனினும் விண்ணப்பிப்பதற்கான
காலம் முடிவுற்ற நிலையில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களின்
விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், எஞ்சியுள்ள
மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இரண்டு வாரங்கள் காலக்கெடு
வழங்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக
ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக
மையத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்பதிவுத்
திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக
முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் இதன்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள்
தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆட்பதிவுத் திணைக்களத்தின்
ஆணையாளர் நாயகம் மேலும் விளக்கமளிக்கையில்:
2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு 16 வயது
பூர்த்தியான மாணவர்கள் தனது பாடசாலையின் ஊடாக தேசிய அடையாள அட்டையைப்
பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பத்திரங்களை கடந்த மே
மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு சகல பாடசாலை
அதிபர்களுக்கு எமது திணைக்களத்தின் ஊடாக நாம் அறிவித்த போதிலும் இதுவரையும்
இரண்டரை இலட்சம் மாணவர்களின் விண்ணப்பங்களே கிடைத்துள்ளன.
உரிய காலத்திற்கு பின்னர் தாமதித்து கிடைக்கப்பட்ட
போதிலும் சுமார் ஐயாயிரம் விண்ணப்பங்கள் முத்திரை ஒட்டப்படாமலும் அவற்றில்
3387 விண்ணப்பங்கள் கையொப்பம் இடாமலும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.
இவ்வாறான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீண்டும்
சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்ப உரிய முறையில் நிரப்பி எடுக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அசெளகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே நேர காலத்துடன் விண்ணப்பி க்குமாறு வழக்கமாககோருவதாகத் தெரிவித்த அவர், எஞ்சியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரண்டு வாரங்கள் காலக்கெடு வழங்கியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply