இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்
இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள்
குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழு
தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக,
அவரைக் காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக முடியாது என அந்த
அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரே அந்த பாவங்களுக்கு காரணமானவர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, இலங்கை இராணுவத்திலேயே தொடர்ந்து பணிபுரிவதால் தனது பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்தவில்லை.
உயர்மட்ட உடன்படிக்கையின் படி நடேசனும், புலித்தேவனும் சரணடைந்தனர், அவர்களை என்ன செய்வது என படையினர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர்,- மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா அவர்களை கொன்றுவிடுமாறு கோத்தபாஜ ராஜபக்சவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தார். அவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
சனல் 4 வெளியிட்ட வீடியோக்களில் காண்பிக்கப்பட்டது போன்று கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் கீழ், சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்கள் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி கிறிஸாந்த சில்வாவிடம் சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்கள், புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வேளை அந்த இராணுவ அதிகாரி வன்னிக் கட்டளை தளபதியாக இருந்த முன்னால் இராணுவத் தளபதி ஜகத் டயசின் உத்தரவை பின்பற்றினார். அவருக்கு கோத்தபாஜ ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார். (இதன் பின்னர் கிறிஸாந்த சில்வா ரஷ்சிய தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார்.)என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கட்டளைத் தளபதி யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்டார். ஆனால் சரணடைந்த மக்கள் குறித்து பெருமளவு இராணுவத்தினர் மனிதாபிமானத்துடனேயே நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். கோத்தாவின் முட்டாள் தனமான பிடிவாதத்தால் தான் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன ஆகவே அவர்தான் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் முழு இராணுவத்தினரும் அல்ல என்றும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்கப் போகிறீர்களா என்ற எமது கேள்விக்கு ஆம் என பதிலளித்த அந்த அதிகாரி இல்லாவிட்டால் முழுப் படையினருடைய கௌரவமும் பாதிக்கப்படும் என்றார்.
அவருடனான பேட்டி கீழ் வருமாறு.
கேள்வி: அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தார்களா?
பதில்:
ஆம். அவர்கள் அப்படித்தான் சரணடைய வந்தார்கள். அவர்களை கொல்லுமாறு
உத்தரவிடப்பட்டது. அவர்கள் மேலிடங்களின் இணக்கப்பாட்டுடனேயே தாங்கள்
வந்துள்ளதாக மன்றாடினர்.
கேள்வி: யாரு இவ்வாறு மன்றாடியது?
பதில்: புலித்தேவனும் நடேசனும் தான். அவர்கள் கால்களில் வீழ்ந்து மன்றாடினார்கள். இவ்வாறான தருணங்களில் ஒருவரை சுடக் கூடாது என படையினருக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களால் இது முடியாது முடியாது என்றார்கள். ஆனால் இல்லை இல்லை எவரையும் பொறுப்பேற்கக் கூடாது சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவு வழங்கப்பட்டது.
கேள்வி: யார் அதை தெரிவித்தது?
பதில்: சவிந்திர சில்வாவே அந்த உயர்மட்ட உத்தரவை வழங்கினார். படையினர் அவர்கள் அழும் போது தங்களால் எதனையும் செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். உண்மையில் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புலித்தேவன் அவர்களது அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்.
அவர்களுடன் சரணடைந்த பெண்மணி இன்னும் இருக்கிறார். முட்டாள் தனமான பிடிவாதத்தின் காரணமாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இதனைச் செய்ததே பெரும் தவறு. மாற்று சட்ட நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து கோத்தபாய சிறிதும் சிந்திக்கவில்லை. சரணடைபவர்களை கொலை செய்யும் நாகரிக நாடு எதுவும் இருக்க முடியாது. இதன் காரணமாக இந்தக் குற்றத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
யுத்தத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்த வேளை எதிரிகளை கைது செய்துள்ளோம். அவர்களை நாங்கள் சுட்டுக் கொன்றது கிடையாது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவில்லையா? படையினருக்கு அவ்வாறு தெரியும். அவர்கள் சுடமாட்டார்கள். உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வரும் போதே இந்தத் தவறைச் செய்வார்கள்.
இவ்வாறு சரணடைந்தவர்கள் பலர் முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களில் பலர் தனியாக இனம் காணப்பட்டு பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதையே சனல்4 வீடியோ காண்பிக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவ்வேளை வன்னி கட்டளை தளபதியாக இருந்த முன்னாள் இராணுவ தளபதி அவருக்கு கிடைத்த உத்தரவை தொடா்ந்து புலனாய்வு பிரிவினருக்கு இந்த உத்தரவை வழங்கினார்.
கேள்வி: யார் அது எந்த முகாம்?
பதில்: முள்ளிவாய்க்காலிருந்து வருபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களுடன் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் அது.-வவுனியாவில்- கிறிஸாந்த சில்வா அந்த முகாம் பொறுப்பதிகாரியாக விளங்கினார்- அவர் தற்போது ரஷ்சியாவிற்கான துணை தூதுவர்.
கேள்வி: FMA என்பதன் அர்த்தம் என்ன?
பதில்: முன்னரங்கு பராமரிப்பு பகுதி என்பது இதன் அர்த்தம்.கைதிகள் இங்கு கொண்டுவரப்படுவார்கள், யுத்தக் கைதிகளுக்கான முகாம்கள் இங்குள்ளன. எவராது இங்கு சரணடைந்தால் அவர்களிற்கு ஒரு இலக்கத்தை வழங்கி சட்ட விசாரணை முடியும் வரை அவர்களை பாதுகாக்க வேண்டும்-அவர்களை சுட்டுக்கொல்ல முடியாது.
கேள்வி: கிறிஸாந்த சில்வாவிற்கு உத்தரவுகளை வழங்கியது யார்?
பதில்: கோத்தபாயவின் பேரில் அப்போதைய வன்னி கட்டளை தளபதியாக விளங்கிய முன்னால் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய இந்த உத்தரவை வழங்கினார். அவர்களை விடுதலை செய்து இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கிறிஸாந்த சில்வாவிற்கு உத்தரவுகளை வழங்கினார். நூற்றுக்கணக்கானவாகள் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கேள்வி: அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனரா?
பதில்: ஆம். ஏனையவர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் இறந்தனர். இது ஒரு சபிக்கப்பட்ட விடயம், வழக்கு. இது ஒரு சாதாரண விடயம் அல்ல. பொன்சேகாவும் இதற்கு அனுமதியளித்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் அதற்கு அனுமதி அளித்திருந்தால் அவரும் பொறுப்புக் கூற வேண்டும். அவர் அங்கு இருந்தாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் யுத்தத்தில் சரணடைந்த எவரும் சுட்டுக் கொல்லப்படக் கூடாது.
கேள்வி: இந்த விடயங்களை மனித உரிமை ஆணைக் குழு முன் அம்பலப்படுத்த நீங்கள் தயாரா?
பதில்: ஆம்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் துரோகி இல்லையா?
பதில்: எப்படிச் சொல்ல முடியும். நாங்கள் தானே யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள். யுத்தத்தில் எந்தக் கட்டத்திலும் நாங்கள் தப்பி ஓடவில்லை. இரண்டு தடவை எனக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் ஏற்பட்டன. முட்டாள் தனமான பிடிவாதத்தால் தனியொருவர் செய்த குற்றங்களுக்காக நாட்டையும் முழுப் படையினரையும் பலியாக்க வேண்டுமா? அந்த தனி நபரை காப்பாற்றுவதற்காக.
உரிய சாட்சியங்களை முன் வைக்காவிட்டால் பாதிப்புகளை சந்திக்கப் போவது முழு நாடும் மக்களும் தான்.
கேள்வி: யார் அந்த தனி நபர்? உங்களுக்கு தெரியுமா?
பதில்: கோத்தபாய ராஜபக்ச.
No comments:
Post a Comment
Leave A Reply