blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, July 21, 2014

தடயத்தை அழிக்கும் கிளர்ச்சியாளர்கள்: உக்ரைன் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…!

சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர். இதுவரை 38 சடலங்களை அவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர் என உக்ரைன் அரசு குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 17ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்-17 விமானம் ரஷ்ய எல்லையில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர்.

நடுவானில் வெடித்து சிதறிய விமானம் ரஷ்ய எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள உக்ரைனின் கிரபோவா கிராமத்தில் தூள் தூளாக விழுந்தது. ஏராளமான பயணிகளின் உடல்கள் கொத்து கொத்தாக விழுந்தன.

விமானம் நொறுங்கி விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலும் உடல்கள், விமானத்தின் பாகங்கள் சிதறி உள்ளன. இப்பகுதி, உக்ரைன் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கிறது.

இதனால், ரஷ்யா ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் அரசு கூறி உள்ளது. மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் பேசியது தொடர்பான ஒலிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ‘உக்ரைன் ராணுவ விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி விட்டனர்’ என அவர்கள் பேசி உள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணி மேற்கொள்வதற்காக நெதர்லாந்து, மலேசியா நாட்டிலிருந்து மீட்பு குழுவினர் உக்ரைனுக்கு விரைந்துள்ளனர். நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸ் திம்மர்மன்ஸ் தலைமையில் 15 தடவியல் நிபுணர்கள் கீவ் நகருக்கு வந்துள்ளனர். மலேசியாவில் இருந்து 62 பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

இதுதுவிர, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குழுவும் கிரபோவா கிராமத்துக்கு வந்துள்ளது. நேற்று இக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ள முயன்றனர்.

ஆனால், ரஷ்ய கிளர்ச்சியா ளர்கள் அவர்களை விடாமல் தடை விதித்தனர். இதையடுத்து, உக்ரைன் அரசு, கிளர்ச்சியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல்களை மீட்பதற்காக, 400 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்ட சுற்றுப்புற பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படாது என கிளர்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளதை தொடர்ந்து, ஐரோப்பிய குழுவினர் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் நெதர்லாந்து, மலேசிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு உக்ரைன் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளது. அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது நடத்திருப்பது சர்வதேச குற்றமாகும். இதனால், ரஷ்ய அரசு உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் தடயங்களை அழித்து வருகின்றனர். இதுவரை 38 உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர்.

அவற்றை, கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டோனெட்ஸ்க் நகருக்கு கொண்டு சென்று தீவைத்து எரித்துள்ளனர். அதே போல விமான சிதறல்களையும் அவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்’ என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உலக நாடுகள் கூட்டாக ரஷ்யாவுக்கு நெருக்கடி தர வேண்டுமெனவும் உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, விமான தாக்குதல் புகாரில் சிக்கியிருப்பதால், உலக நாடுகளின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது ரஷ்யா. தற்போது உக்ரைனின் மீண்டும் ஒரு குற்றச்சாட் டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள் ளது. பல தரப்பிலிருந்து ரஷ்யாவுக்கு நெருக்கடிகள் வலுக்கின்றன.

ஏவுகணை ஏவியவர்கள் கொலையா?

விமான நொறுங்கிய இடத்தில் உள்ள தடயங்களை மட்டுமின்றி, பக் ஏவுகணை தாங்கியையும் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அழித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட பக் ஏவுகணை தாங்கி, தாக்குதல் நடந்த 2 மணி நேரத்துக்கு முன்பாக அப்பகுதியில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக உக்ரைன் அரசு கூறி உள்ளது.

இதற்கிடையே, சர்வதேச விசாரணையில் சிக்கிக் கொள்வோம் என்பதால் அந்த ஏவுகணை தாங்கியை அழித்ததோடு இல்லாமல், அவற்றில் ஏவுகணையை ஏவியவர்களை ரஷ்ய கிளர்ச்சியாளர்களே கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், இனி இந்த விவகாரத்தில் உண்மையை நிரூபிப்பது சிரமமானது என்றும் உக்ரைன் கூறுகிறது.

பிரதமரின் பாட்டியும் பலி

வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கின் பாட்டி சிட்டி அமிராவும் பயணித்து, பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானம் ஏறினார். கோலாலம் பூர் செல்லும் வழியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியான 298 பேரில் ஒருவராக சிட்டி அமிராவும் உயிரிழந்தார்.

பலியானவர்கள்

விமான தாக்குதலில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம்:
நெதர்லாந்து – 192
மலேசியா – 44
ஆஸ்திரேலியா – 27
இந்தோனேஷியா – 12
பிரிட்டன் – 10
ஜெர்மனி – 4
பெல்ஜியம் – 4
பிலிப்பைன்ஸ் – 3
கனடா – 1
நியூசிலாந்து – 1

ழூ நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க குடியுரிமையும், பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தென் ஆப்ரிக்க குடியுரிமையும் பெற்றவர்கள். மலேசியாவின் 44 பேரும் 15 விமான ஊழியர்களும் அடங்குவர்.

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் அமெரிக்கா

மலேசிய விமான தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘விமானத்தை வீழ்த்தியது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்க ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என கூறி உள்ளார்.

மேலும், சர்வதேச விசாரணைக்காக பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவையும் அமெரிக்கா திரட்டி வருகிறது.

1 தரையில் இருந்து வான்வெளியில் தாக்கக் கூடிய ஏவுகணை மூலம் மலேசிய பயணிகள் விமானம் தாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இந்த ஏவுகணையை ரஷ்யாதான் சப்ளை செய்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ்ஏ -11 ரக ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வகை ஏவுகணை 18 அடி நீளம் உடையது. அதிகபட்சமாக 72,000 அடி சுற்றளவுக்கு தாக்குதல் திறன் படைத்தது.

3 மலேசிய பயணிகள் விமானம், உக்ரைனில் டூரெஜ், ஸ்னிஜ்னி ஆகிய நகரங்களுக்கு அருகில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

4 உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் முழுவதும் ஐரோப்பாவில் இருந்து ஆசிய கண்டத்திற்கு பல விமானங்கள் இந்த வான்வெளியில்தான் பயணம் செய்துள்ளன. ஆனால், பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த வான்வெளி பகுதியை தவிர்த்துள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►