blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 20, 2014

முஸ்லிம்களின் தொழுகை அறை மீதான கழிவு ஒயில் வீச்சை அநாகரிகம்; யாழ்.பல்கலை மாணவர் கண்டனம்

முஸ்லிம்களின் தொழுகை அறை மீதான கழிவு ஒயில் வீச்சை அநாகரிகம் என யாழ்.பல்கலை மாணவர் கண்டனம்யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள முஸ்லிம் தொழுகை அறையின் மீது இனந்தெரியாத நபர்களினால் இன்று வெள்ளிக்கிழமை காலை கழிவு ஒயில் வீசப்பட்ட நடவடிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக 'தொடரும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டிக்கின்றோம்' என்ற தலைப்பில் ஒன்றியத்தினால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டவை வருமாறு:-

இலங்கையின் சுதந்திரத்தின் பின் தமிழ் சிறுபான்மை இனத்தின் மீதான பேரினவாதத்தின் அடக்கு முறைகள் முள்ளிவாய்க்காலோடு முக்கால்வாசி முடங்கிப்போயுள்ள நிலையில் மீண்டும் தனது கோரப்பிடியினை மதவாதம் என்ற பெயரில் இன்னுமொரு சிறுபான்மை இனத்தின் மீது அது திணிக்கத் தொடங்கிவிட்டது என்பதையே தென்னிலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் குறிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் அமைதி வழியிலான கண்டனப் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டது.

சிறுபான்மை இனங்கள் மீதான பேரினவாதத்தின் தளராத பிடியிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகும்.

நேற்றைய இப்போராட்டத்தின் எதிரொலியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள முஸ்லிம் தொழுகை அறையின் மீது இனம்தெரியாத நபர்களினால் காலையில் கழிவு ஒயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாகக் கல்வி கற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இம்மாதிரியான விரும்பத்தகாத செயல்களை எமது மாணவர் ஒன்றியம் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தனித்துவம் மிக்க ஓர் கல்விச் சாலையாகும். இத்தகைய இடத்திற்குள் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஒருபோதுமே நாம் அனுமதியளிக்கப் போவதில்லை.

இன்று காலை நடந்த இச்சவம்பவம் நேற்றைய கண்டனப் போராட்டத்திற்குப் பதிலடியாகவே நடத்தப்பட்டதென்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

இதுவும் மதவாதம் சார்ந்த ஒரு தாக்குதல் சம்பவமே. இந்த அநாகரிகமான சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டதே ஒரு கல்விச்சாலை.

மாணவர்களது தடையின்றிய கற்றல் செயற்பாடுகளிற்கு இடையூறாக அமையும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் நாகரிகமுள்ள கல்விப்புலத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.

ஆகவே இந்தச் சம்பவத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரான நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு சிறுபான்மை இனத்தினர் மீதான அசம்பாவிதங்களுக்கு எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம். - என்றுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►