blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 20, 2014

46 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

46 தமிழக மீனவர்களையும் விடுவிக்க  நடவடிக்கை எடுக்கக் கோரி  மோடிக்கு ஜெயலலிதா கடிதம்இலங்கைச் சிறைகளில் வைக்கப்பட்டள்ள தமிழக மீனவர்கள் 46 பேரை உடனடியாக விடுவிக்கவும் அவர்களின் 11 படகுகளை திரும்பப்பெறவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வுகாணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இருவேறு சம்பவங்களில் 46 தமிழக மீனவர்களையும், அவர்களது 11 படகுகளையும், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, மீண்டும் கடிதம் எழுதுவது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஆறு இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை புதன்கிழமை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 5 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை இரவு பிடித்துச் சென்று, இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மேலும் ஓர் இயந்திரப் படகு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப் படகு கடலில் மூழ்கிவிட்டது. அதிலிருந்த 5 மீனவர்களும் சக மீனவர்களால் மீட்கப்பட்டு, ராமேசுவரத்திற்கு பத்திரமாக திரும்பியுள்ளனர். இதற்குமுன் நடைபெற்ற 2 சம்பவங்களில் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் தங்களின் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், துரதிருர்ஷ்டவசமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளும், மீன்பிடி கருவிகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

அவற்றை விடுவிப்பது அவசியமாகிறது. இந்திய மீனவர்களை, தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக். நீரிணை கடல் பகுதியிலும், மாநில மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவுக்கு அருகிலும் மீன் பிடிக்கவிடாமல் தடுத்து அச்சுறுத்தும் வகையில், இலங்கை கடற்படையினர் நடந்து கொள்ளும் செயல் கண்டனத்துக்குரியது.

இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வகையில் கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவையல்ல என அறிவிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லைக்கோடு பிரச்சினை முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதக்கூடாது.

கச்சத்தீவு பூகோள ரீதியிலும், கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியிலும் இந்தியாவின் ஒரு பகுதி என்பது தமிழகத்தின் நிலைப்பாடாகும்.

லட்சக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்க வேண்டியது அவசியமாகும். பாக். நீரிணைப் பகுதியில், மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளை பெருக்குவதற்காக எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு சாதனங்களை வாங்குவதற்காக மானியம் வழங்குதல், உயர்வகை மீன்பிடி வலைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும் ஊக்கம் அளித்து வருகிறோம். இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிலைத்த மற்றும் நீடித்த தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற மீனவர்கள் அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக இருந்தன.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு நகரில், கடந்த மே மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு, இலங்கை அதிகாரிகளின் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் பிடிவாதமான நிலைப்பாடே காரணமாகும்.

எனினும், தமிழக - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற, நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த 4ஆம் திகதி தாங்கள் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், அவர்களது பாதுகாப்பு மற்றும் அபாயமற்ற வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவும், மத்திய அரசு, மாநில அரசுடன் இணக்கமாகச் செயல்படும் என குறிப்பிட்டிருந்தது ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் இந்த பிரச்னைக்கு நிலையான தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறேன். எனவே, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைச் சிறைகளில் வாடும் 46 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 11 படகுகளுடன் ஏற்கனவே பிடிக்கப்பட்டுள்ள 23 படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►