இந்தியாவில்
வாழும் அனைத்து பெண்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் தாழ் குலப்பெண்கள் அதிகமாக வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதை மேற்கோள்காட்டியே ஆணையாளர் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில் உத்தரபிரதேஷில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சம்பவத்தையும் அவர் ஐ.நா மனித உரிமைகளுக்கான பேரவையில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தாழ் குலத்தைச் சேர்ந்த காரணத்தினால் குறித்த இரு சிறுமிகளின் சடலங்களும் உடனடியாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவில்லை எனவும் நவனீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கணவரை பார்ப்பதற்காக சென்ற பெண்ணொவரும் பொலிஸாரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதையும் ஆணையாளர் நாயகம் ஐ.நா சபை அங்கத்தவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் தொடரும் இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.
தாழ்குலப் பெண்களுக்கான வன்முறைகள் அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் சீராக இடம்பெறுவதில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் மாத்திரமின்றி ஆசிய நாடுகளில் இந்த பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இதனால் சுமார் 260 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply