இந்தியப்
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
ஜெயராம் கலந்துகொள்வதில் நிச்சயமற்ற நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதாக
தெரிவிக்கப்படுகின்றது.நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வை தமிழக முதல்வர் பகிஷ்கரிக்க கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் மற்றும் டொக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன அறிவித்துள்ளன.
எனினும் மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மோடியின் பதவியேற்பு வைபவத்தை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.
இதேவேளை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடகா மற்றும் கேரள முதலமைச்சர்கள் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அத்துடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரும் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருக்கத் தீர்தானித்துள்ளனர்
இதேவேளை, கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டியும் மோடியில் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் அழைப்பை ஏற்று நடிகர்களான ரஜினிகாந் மற்றும் விஜய் ஆகியோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை நடைபெறவுள்ள மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply