'அரசாங்கம் மேற்கிலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் வாழும்
எங்கள் மக்களை அடக்கி, ஒடுக்கி, சுரண்டி தன் பெரும்பான்மை இனவாத, மதவாத,
திருட்டு அரசியல் பயணத்தை மேற்கொள்கிறது.
இந்த பயணத்துக்கு எதிராகத்தான்
நாம் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போராடுகிறோம். இன்று எங்கள்
இணைந்த போராட்டம் வெற்றியளிக்க ஆரம்பித்துவிட்டது' என ஜனநாயக மக்கள்
முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'எதிர்கட்சிகள் தூங்கும்போது தேர்தலை நடத்தி தங்கள் பேரினவாத பயணத்தை தொடரலாம் என இந்த மஹிந்த அரசு கனவு காண்கிறது. அது கெட்ட கனவு. இந்த கனவுக்கு அரசுக்கு துதி பாடும் நம்மவர்களும் துணை நிற்கிறார்கள். இவர்கள் அனைவரின் கனவுகளும் கலையும் காலம் வந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் தூங்கவில்லை. நாங்கள் விழித்துக்கொண்டுதான் கனவு காண்கிறோம். பொது வேட்பாளர் தொடர்பாகவும், பொது தேர்தல் தொடர்பாகவும் நம்மிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. நாங்கள் பொது வேட்பாளருக்கும் தயார். பொது தேர்தலுக்கும் தயார். பொது தேர்தலில் தனித்தும் தயார். கூட்டணிக்கும் தயார். அவசியமானால் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு இணைந்த அகில இலங்கை தமிழ் தேசிய கூட்டணி யோசனை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பரிசீலிக்கவும் தயார்.
அரசின் இறுதி பயணம்
இந்த அரசாங்கம் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த அரசில் இருந்து வெளியேறி இந்த அரசின் முடிவை துரிதப்படுத்தும்படி, இதன் உள்ளே இருக்கும் சிறுபான்மை கட்சிகளை கோருகிறேன். கடந்த மேல்மாகாணசபை, தென்மாகாணசபை தேர்தல்களில் இந்த அரசுக்கு இரண்டரை இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ஷ ஆடிப்போயுள்ளார். படிப்படியாக தனது செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் குறைந்து வருவதை அவர் புரிந்து கொண்டுள்ளார். இதனால்தான் இடைதேர்தலை உடன் நடத்தி தன்னை திடப்படுத்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். ஆனால் அரசின் பயணம் இன்று எந்த பக்கம் திரும்புவது என வழி தெரியாமல் முச்சந்தியில் விழி பிதுங்கி நிற்கிறது. ஜனாதிபதி தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா என இரண்டையும் பற்றி அரசாங்கம் பேசி வருகிறது.
எம்மால் முடியும்
இன்று தலைநகர் கொழும்பிலே எங்கள் தலைமையில் சிங்கள ஜனநாயக பங்குபற்றலுடன் மேற்கில், மலையகத்தில், வடக்கில், கிழக்கில் வாழும் ஒடுக்கப்படும் எங்கள் மக்களுக்காக நாம் தலைநகரில் தெருத்தெருவாக ஊர்வலமாய் சென்று எழுச்சி குரல் எழுப்பினோம். நமது கட்சியின் மற்றும் நமது ஜதொகா தொழிற்சங்கத்தின் கண்டி, நுவரெலியா மாவட்ட கிளைகளை உள்ளடக்கிய மலையக செயலணி, புறக்கோட்டை சுமை தொழிலாளர் சங்கம், கம்பஹா மாவட்ட செயலணி, கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை, கொலொன்னாவை, தெஹிவளை, கொழும்பு மாநகர செயலணிகள் மற்றும் கட்சியின் ஜனநாயக இளைஞர் இணையம், மகளிர் இணையம், தலைநகர இளம் வர்த்தகர் இணையம் ஆகிய பல்வேறு உட்கட்சி அமைப்புகளை ஒன்று திரட்டி நமது நடை பேரணியை நாம் நடத்தியுள்ளோம்.
இவை இதுவரை பெரும்பான்மை கட்சிகள் மாத்திரமே கொழும்பில் செய்து காட்ட, நமது மக்கள் வியந்து பார்த்த நடப்புகள். இனி எம்மாலும் முடியும் என்று நாம் இன்று காட்டிவிட்டோம். எதிர்காலத்தில் இதைவிட அதிகமாக நாம் செய்து காட்டுவோம். எம்மாலும் முடியும், என்பதுதான் என் பாணி. இதுதான் எங்கள் பயணம். எங்கள் பயணத்தை வேடிக்கை பார்க்காதீர்கள். எங்களுடன் வந்து பங்காளியாகுங்கள், வந்து என் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என நாடு முழுக்க வாழும் நேர்மையுள்ள, அர்ப்பணிப்புள்ள, தூரநோக்குள்ள உணர்வுள்ள தோழர்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன்.
எங்கள் தனித்துவ வளர்ச்சி
நாங்கள் எங்கள் சொந்த ஏணி சின்னத்தில் கடைசியாக நடைபெற்ற மேல்மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டோம். ஏணி சின்னத்தில் இந்த முறை தான் முதன் முதலில் நாம் போட்டியிடவில்லை. இதற்கு முன்னரும் பலமுறை ஏணி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். 1999ஆம் ஆண்டு 3,218 வாக்குகளை பெற்று தனித்துவமாக ஆரம்பித்த நமது பயணம், 2002ஆம் ஆண்டு 13,147 வாக்குகளை பெற்று, 2004ஆம் வருடம் 15,017 வாக்குகளை பெற்று, 2006ஆம் வருடம் 16,068 வாக்குகளை பெற்று, 2011ஆம் வருடம் 30,000 வாக்குகளை பெற்று, 2014ஆம் வருடம் 51,000 வாக்குகளை பெற்று இன்று தனித்துவமாக வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் எங்கள் சொந்த சின்னத்தில் தனித்துவமாக மேல்மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களில் நாம் பெற்ற வாக்குகள்.
அடுத்த கட்டத்தில் நாம் கொழும்பில் 75,000 வாக்குகளை தனித்துவமாக பெறுவோம். எதிர்காலத்தில் ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று நாம் காட்டுவோம். இன்று மேல்மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவங்களை கொழும்பு மாநகரசபை, தெஹிவளை-கல்கிசை மாநகரசபை, கொல்லோன்னாவை நகரசபை, மேல்மாகாணசபை ஆகிய அனைத்து சபைகளிலும் பெற்றுள்ள ஒரே தமிழ் தலைமை நாங்கள்தான். எங்களுக்கு உரிய கொழும்பு மாவட்டத்தின் இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் ஒன்று, அரசினால் திருடப்பட்டுள்ளது. இன்னொன்று, கையாலாகாதனத்தினால் கைநழுவவிடப்பட்டுள்ளது. இனிமேல் இந்த கட்சியில் திருடர்களுக்கு இடமில்லை. கையாலாகாத சோம்பேறிகளுக்கும் இடமில்லை. இங்கே அர்ப்பணிப்புள்ள, நேர்மையாளர்களுக்கு மாத்திரமே இனி பதவிகள் வழங்கப்படும்.
எமது இரட்டை நோக்கு கொள்கை
மேல்மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாவலானாக நாம் பணியாற்றுகிறோம். எங்கள் உரிமைகளை பேசியும், போராடியும் நாம் பெறுவோம். இருப்பதை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். இங்கே எங்கள் இன உரிமைக்குரல் நாங்கள்தான். ஆனால், எமது குரல் தமிழ் இனவாத குரல் கிடையாது. இது பல இனங்கள் கலந்து வாழும் மேல்மாகாணம். தமிழர்கள் செறிவாக, பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு அல்லது மலையக அரசியல் பாணியை அப்படியே இங்கு நாம் பின்பற்ற முடியாது. எனக்கு பொறுப்பு இருக்கிறது. எம்முடன் வாழும் சகோதர இனங்களுடன் நேர்மையான இன நல்லிணக்கத்துக்கும் தயாராக இருக்கின்றோம் என்பதை எப்போதும் நாம் எமது செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறோம்.
நமது கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும்
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான எங்கள் உறவு உணர்வுபூர்வமானது. அதை எவராலும் அழிக்க முடியாது. அந்த உறவு, வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு என்று நாடு முழுக்கவும் அரசியல் வடிவம் பெறுகின்ற, அகில இலங்கை தமிழ் தேசிய கூட்டணியாக மாறும் காலம் ஒருநாள் வரும். அது எப்போது என என்னால் உடனடியாக சொல்ல முடியாது. ஆனால் அது ஒருநாள் நடக்கும். இந்நாட்டில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்கள் தத்தம் தனித்துவங்களுடன் உள்வாங்கப்பட்டு, ஒன்றுபட வேண்டும் என்று, மேல்மாகாண தேர்தல் வேளையில் எமது கூட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கூறிய கருத்தை நான் மிகவும் ரசித்தேன்.
நமது கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும்
ஐக்கிய தேசிய கட்சியுடனான எமது உறவை பற்றி நானும், அந்த கட்சியின் தலைவரும்தான் பேசி முடிவு செய்வோம். சிலர் தங்கள் சொந்த சோகங்களினால் ஆதங்க கருத்துகளை வெளியிடுகிறார்கள். சொந்த கருத்துகளை சொல்லும் இந்த நபர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இனிமேல் எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் நகரசபை, மாநகரசபை, மாகாணசபை, நாடாளுமன்றம் என்ற எந்த ஒரு தேர்தலிலும் தமிழ் வாக்குகள் பெற வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு பெரும்பான்மை கட்சியும் எங்களை நாட வேண்டும். நாங்கள் கூட வராவிட்டால் தமிழ் வாக்கும் உங்களுக்கு இல்லை. தமிழ் பிரதிநிதித்துவமும் உங்களுக்கு இல்லை. நாங்கள் அரசுக்கு எதிரான எதிரணி கட்சி. ஐக்கிய தேசிய கட்சியுடன் எமது உறவு இருக்கும் அதேவேளையில், நாம் ஜேவிபி, பொன்சேகாவின் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடனும் எங்க உறவை வளர்க்க விரும்புகிறோம்.
எதிர்காலம்
கடைசியாக நடைபெற்ற மேல்மாகாணசபை தேர்தலில் நாம் பெற்றுள்ள வாக்கு தொகைகள் அடுத்துவரும் உள்ளூராட்சி தேர்தல்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகளை மேல்மாகாணம் முழுக்க உருவாக்கும் வல்லமை உள்ளவையாகும். கொழும்பு மாநகரசபையிலே இன்றுள்ள ஆறு உறுப்பினர் தொகை, அடுத்தமுறை பத்தாக உயரும். கொலொன்னாவையில் மூவரும், தெஹிவளையில் இருவரும், மொறட்டுவையில் ஒருவரும், அவிசாவளை நகரசபையில் இருவரும், அவிசாவளை பிரதேச சபையில் இருவரும் எங்கள் கட்சியின் சார்பாக தெரிவாக கூடிய வாக்கு எங்களிடம் இப்போது இருக்கின்றது.
அதேபோல் வத்தளை-மாபொலை நரசபையிலும், வத்தளை பிரதேச சபையிலும், நீர்கொழும்பு மாநரகசபையிலும் நமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க கூடிய வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். இது இப்போதைய நிலவரம். இன்னும் எதிர்காலத்தில் எமது வாக்குகள் இன்னமும் அதிகரித்து, நமது உறுப்பினர் தொகையும் அதிகரிக்கும். அடுத்து வரும் தேர்தல், விகிதாசார முறையோ அல்லது கலப்பு முறையோ, எதற்கும் நாம் தயார். அதேபோல் எதிர்கால மாகாணசபை, நாடாளுன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடவும், கூட்டு சேரவும் அவ்வந்த கால அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் நாம் முடிவு செய்வோம். இதுபற்றி எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
துரோகிகளுக்கு இடமில்லை
என் முதுகில் குத்தி, எங்கள் கட்சியை குள்ள நரிகளுடன் சேர்ந்து அழிக்க திட்டம் தீட்டிய துரோகிகளுக்கு மக்களே ஓய்வு வழங்கி விட்டார்கள். இன்று இவர்கள் இங்கு இல்லாததால், நம் கட்சி நாளுக்கு நாள் வளர்வதை நம் கண்களாலேயே தெட்டதெளிவாக பார்க்கிறோம். வாழ்வில் தம்மை தூக்கிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்கள் இனி தத்தம் வீடுகளை இருந்தவாறு எம்மை ரசிக்கலாம்.
மேதின தீர்மானங்கள்
நாட்டை பிரிக்காமல், அதிகாரத்தை பிரிப்போம். அரசியல் அதிகாரத்தை பகிந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம். மலையக மக்களின் காணி-வீட்டுரிமைக்காக குரல் கொடுத்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைந்து போராடுவோம். கொழும்பிலே வீட்டுடைப்புக்கு எதிராக குரல் கொடுத்து போராடுவோம். உழைக்கும் மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்திற்காக போராடுவோம். இனவாதத்தை, மதவாதத்தை எதிர்த்து ஒன்று சேர்ந்து போராடுவோம். இந்த தாரக மந்திரங்களே எங்கள் 2014ஆம் வருட மேதின தீர்மானங்கள்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply