blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 21, 2014

மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பான் கீ மூனிடம் ஜனாதிபதி கோரிக்கை

மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பான் கீ மூனிடம் ஜனாதிபதி கோரிக்கைஇலங்கையின் அபிவிருத்தியை நேரில் கண்டுகொள்வதற்காக மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஆசியாவின் உள்ளக விவகாரங்கள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை சந்தித்தபோதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஐநா செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரிவாக தெளிவுபடுத்திக் கூறியதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவற்றுள் 30 வீதமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.

யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐநா செயலாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
சர்வதேச விசாரணையானது, இலங்கை மக்களின் கண்ணோட்டத்தில் அனுகூலமாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையின் 2ஆம் மற்றும் 10 ஆம் பரிந்துரைகளில் காணப்படுகின்ற பரஸ்பரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவத்தை இதன்போது பான் கீ மூன் பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்ற ஆசியாவின் உள்ளக விவகாரங்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்பான நான்காவது மாநாட்டில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►