blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 2, 2014

ஜனாதிபதிக்கு முஸ்லிம் பேரவை கடிதம்

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த கடிதத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசீ, ரிஷாத் பதியூதீன், எ.எம்.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியான கபீர் ஹாசீம் உள்ளிட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை உரிய முறையில் மீள்குடியேற்றப்படாத காரணத்தினால் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களான சிங்கள ராவய, பொதுபலசேனா மற்றும் ராவணா பலய போன்றன கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் முழு விபரம் வருமாறு...

ஏப்ரல் 25, 2014

அதிமேதகு ஜனாதிபதி,
ஜனாதிபதி அலுவலகம்,
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசு,
அலரி மாளிகை,
காலி வீதி,
கொழும்பு – 03

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,

பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ராவண பலகாய ஆகிய சில பௌத்த தீவிரவாத சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு பிரசாரங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றோம்.

முஸ்லிம்களது வணக்க ஸ்தலங்கள், ஹலால் மற்றும் உடை உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த மேற்படி தரப்புக்கள், இலங்கை வரலாற்றில் மிகமோசமானதொரு நிகழ்வாக கருதப்படுகின்ற விடுதலைப் புலிகளினால் 1990களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட. மாகாண முஸ்லிம்களது மீள்குடியேற்றத்திலும் இன்று தலையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி அவர்களே, 'பழைய அகதிகள்' என இம்மக்கள் முத்திரையிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் இன் நிதியுதவி உட்பட சர்வதேச முகவர் நிலையங்களினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு மீள்குடியேற்ற திட்டத்திலும் இவ் வடமாகாண முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை.

இம்மக்களது மீள்குடியேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு உதவியும் இதுவரை மேற்கொள்ளப்படாததன் காரணமாக முஸ்லிம் சிவில், மத மற்றும் அரசியல் தலைவர்கள் - முஸ்லிம் நாடுகளினதும் தனவந்தர்களினதும் உதவியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சில நன்கொடையாளர்கள் மேற்படி முயற்சிக்கு சாதகமாக பதிலளித்துள்ளதுடன் அவர்களது உதவியினை கொண்டு சில வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேற்படி வீடுகள் அனைத்தும் மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதியின் விஷேட செயலணி மற்றும் மாவட்ட செயலகத்தின் காணி பகிர்ந்தளிப்பு விதிமுறைகளுக்கு அமையவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய சரணாலயத்தினுள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் பொதுபல சேனா அமைப்பும் சில ஊடகங்களும் கூறி வருகின்றன.

கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்து மறங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வாழ்ந்து இவ்விடம்பெயர்ந்த மக்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கு உடனடியாக முன்வருமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களை தாழ்மையுடன் வேண்டி இத்தாள் கையொப்பமிடுகின்றோம்.

உங்கள் தாழ்மையுள்ள

ஏ.எச்.எம். பௌசி      
ரவூப் ஹக்கீம்      
ஏ.எல்.எம். அதாவுல்லா         
ரிஷாத் பதியுதீன்
பஷீர் சேகு தாவூத்      
ஏ.எச்.எம். அஸ்வர்  
ஏ.ஆர்.எம்.ஏ. காதர்          
பைசர் முஸ்தபா
கபீர் ஹாசிம்         
எம்.எஸ்.தௌபீக்     
பைசல் காசீம்         
எம்.எச்.ஹாரீஸ்
உனைஸ் பாறூக்      
முஸ்தபா பாவா பாறூக்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►