2007ஆம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழுப்பில் இடம்பெற்ற மூன்று பாரிய
குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இராணுவ அதிகாரிகள் கொள்ளப்பட்ட
சம்பவங்களிலும் தொடர்புடையவரென பொலிசாரினால் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டிருந் பத்மநாதன் ராஜீவ் ஆறு வருடங்களின் பின்னர் விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி .தவராசாவின் வாதத்தையடுத்தே மேல் நீதிமன்றினால் புதன்கிழமை (30) அவர் விடுதலை செய்யப்பட்டார்.
புறக்கோட்டை றெக்ளமேசன் வீதி முதலாம் குறுக்கத் தெருவில் 2007 ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதி, பஸ் வண்டியில் நடாத்திய குண்டு வெடிப்பில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பொது மக்கள் 15 பேர் படுகாயமடைந்தனர்.
2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி கொம்பனித்தெரு குண்டுத் தாக்குதலில்; இராணுவீரர் கொல்லப்பட்டதுடன் பொது மக்கள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
கொழும்பு-15 மோதரையில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி, புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிசார் ஒருவர் உட்பட ஐந்து பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாக கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு பொலிசாரினால் விசாரணைகள் நடாத்தப்பட்டன.
விசாரணைகளை அடுத்து, பத்மநாதன் ராஜீவ், கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதியன்று கொட்டாஞ்சேனை பொலிசாரினால கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவரது வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி -56 துப்பாக்கி, ரி-56 மகசின் நான்கும் அதற்கான குண்டுகள், 115-எஜ், எம் ஈ. ஜி,லோஞ்சர் துவக்கு ஒன்றும் அதன் குண்டுகள் 194 உம், பற்றரிகள், சீ-4 வெடிப்பொருள் ஐந்து கிலோவையும் பொலிசார் கைப்பற்றினர்.
இதேவேளை, லெப்டினட் திசாநாயக முதியாசலாகே திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1) பிரிவின் கீழ் 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி 20 ஆண்டுகள் தண்டணை வழங்கக்கூடிய ஒரு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பல இடங்களில் ஆயுதங்களையும் தற்கொலை அங்கிகளையும் மறைத்து வைத்ததுடன் புலிகள் இயக்கத்தை சார்ந்த ஆனந்த வர்மன், விஜயன் ஆகியோருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டுப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரங்களின் அடிப்படையில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரினால், பத்மநாதன் ராஜீவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
கைதியான பத்மநாதன் ராஜிவ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.
முதலாவது வழக்கில் லெப்டினட் திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்திய் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு அரசதரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள ஒரே சான்று எதிரியினால் சுயவிருப்பில் வழங்கப்பட்டதென அரச தரப்பினால் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமேயாகும்.
கொம்பனித் தெரு குண்டுத் தாக்ககுதலில் பங்குபற்றியதாகவோ அல்லது 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதியன்று லெப்டினட் முதியாசலாகே திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவோ எதிரியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் எந்தவிடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எதிரி தனது கையினாலேயே தமிழ் மொழியில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் வாக்குமூலத்தின் இறுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில் சில்வா, வாக்குமூலத்தை ஒப்புறுதிப்படுத்தி கையெழுத்திடவில்லை .
ஒப்புறுதிப் படுத்தப்படாத ஒப்புதல் வாக்குமூலம் சட்டவலு அற்ற வாக்குமூலமாகும். மேலும் சட்டமா அதிபரினால் எந்தச் சான்றுகளும் அற்ற நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் குற்றச்சாட்டை நிருபிக்க அரச தரப்பால் வேறு எந்தவிதமான சான்றும் முன்வைக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து, கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்ட முதலாவது வழக்கினை அரச சட்டத்தரணி மீளப் பெறப்பட்டதையடுத்து எதிரியான பத்மநாதன் ராஜீவ் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆயுதங்களை தமது வீட்டில் மறைத்துவைத்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்கத் தவறிய குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது வழக்கில் பிரதிவாதி குற்றச்சாட்டை பிரதிவாதி ஒத்துக்கொண்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி .தவராசா நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
தனது கட்சிக்காரர் வயதான தாயாருக்கு ஒரேயொரு ஆண்பிள்ளையாவதுடன் இருதயநோயால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞராவார். வழக்கின் பிரதிவாதியான தனது கட்சிக்காரர் சிறையில்கழித்த காலத்தை கருத்தில்கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி மொராயஸ் எதிரிக்கு ஒரு வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை வழங்கினார்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஆறுவருட சிறைவாழ்கையிலிருந்து விடுதலையான பத்மநாதன் ராஜீவ், நீதிமன்றிற்கு வந்திருந்த தனது தாயாருடன் நீதிமன்றத்ததைவிட்டு வெளியேறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply