அதிகரித்து
வரும் பொது பல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளைக்
கண்டித்து அவ்வமைப்பைத் தடைசெய்யக்கோரும் உடன்பாட்டிற்கு ஏறத்தாழ
உலகம் எங்கும் வாழும் இலங்கை முஸ்லிம்கள்
வந்திருக்கும் நிலையில் இந்த
வாரம் நடாத்திய ஒன்றுகூடலின் போது விரைவில் பொது பல சேனா அமைப்புக்கு
எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கான இணக்கப்பாட்டை கண்டுள்ளார்கள்
பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள்.
SLMDI – UK (Srilanka Muslim Diaspora
Initiative) அமைப்பின் ஏற்பாட்டிலும் செயற்பாட்டிலும் ஏற்கனவே அறிவித்தபடி
ஒன்றுகூடிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கான இணக்கப்பாட்டை
கண்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை இவ்வமைப்பு
வெளியிடும் என அறியமுடிகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் நுற்றுக்கும்
மேற்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கான அமைப்புகள் இருக்கின்ற அதேவேளை தற்போது
உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்நடவடிக்கைகளுக்கு ஏனைய
அமைப்புகளும் ஒற்றுமையாக கை கொடுத்து உதவ வேண்டும் என சோனகர் வலைத்தளம்
மற்றும் முஸ்லிம் குரல் சார்பாக பகிரங்கமாக வேண்டிக்கொள்கிறோம்.
சரி, பிழைகளை ஆராய்ந்து கடந்த ஒரு வருட
காலமாக நாம் கண்டிருக்கும் துன்பங்கள் இன்று வளர்ச்சியடைந்து
மறிச்சுகட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் நிலையில் வாழ்ந்து வரும்
சமூகத்தின் நிம்மதியையும் கெடுக்கும் அளவுக்கு ஒரு பேரினவாத இயக்கம்
வளர்ந்து சென்றுள்ள இந்நிலையில் ஆகக்குறைந்தது பகிரங்கமாக உலகமே பார்க்கும்
அளவுக்கு முஸ்லிம்களை துன்புறுத்தும் இனத்துவேச வார்த்தைகளையும், குர்ஆன்
பற்றிய அவதூறுகளையும் பரப்பிக்கொண்டு சுதந்திரமாக நடமாடும் ஒரு பேரினவாத
பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதில்
இயக்க, கொள்கை மற்றும் அமைப்பு வித்தியாசங்களைக் கலைந்து முஸ்லிம் சமூகம்
ஒன்றுபட வேண்டிய நேரமிது என்பதைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து
எம் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும் !
No comments:
Post a Comment
Leave A Reply