blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 9, 2014

ஜனநாயகத்துக்கு சவால்

தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்புக்கு டி.என்.சேஷன் வந்தபிறகுதான் ஆணையத்தின் உண்மையான அதிகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவ¤ல் எவ்வித குழப்பமும் குளறுபடியும் இல்லாமல் தேர்தல் நடந்தேறுவது உலக நாடுகளுக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக உரிய அதிகாரத்துடன் இயங்குவதே இதற்கு காரணம். சேஷனின் அதே தலைமைத்துவத்தை அடியொற்றி, தேர்தல் ஆணையம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆளும் அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் இதனால்
தடுக்கப்படுகிறது. பதினாறாவது மக்களவை தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அது தெளிவுறத் தெரிகிறது.  தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந் துள்ளன. தேர்தல் நடைபெறும்போது போலீஸ் டிஜிபி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர் மாற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய டிஜிபி நியமிக்கப்பட்டார்.  இதேபோல சென்னை போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட்டு புதியவர் வந்துள்ளார். மூன்று மாவட்ட ஆட்சியர்களும் ஒரு காவல்துறை கண்காணிப்பாளரும் மாற்றப்பட்டுள்ளனர். ஆணையத்துக்கு வந்த புகார்கள் தீர விசாரிக்கப்பட்டு அதனடிப்படையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  

தேர்தல் ஆணையத்தின் இந்த கறார்தன்மை ஆளும்கட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதன் அதிகார உச்சங்களை செரிக்க இயலாமல் தடுமாறுகிறது. 
இதனால் பிரசார கூட்டங்களில் தேர்தல் ஆணையத்தை தமிழக முதல்வர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். மேற்கு வங்க முதல்வரோ இன்னும் ஒருபடி மேலே போய் சவாலே விடுகிறார்.  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மூன்று நாட்களுக்கு முன் மேற்கு வங்கம் சென்று ஆய்வு நடத்தினர். அதனடிப்படையில் சில மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ஒரு மாவட்ட ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டனர்.  ஆனால் இந்த இடமாற்றத்தை மாநில முதல்வர் மம்தா ஏற்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுகிறேன். யாரையும் மாற்ற முடியாது. என்னை வேண்டுமானால் சிறையில் போடுங்கள் என்று பிரசார கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.  ஆணையம் இதைக்கேட்டு அயர்ந்துவிடவில்லை. அதிகாரிகளை இடமாற்றம் செய்யாவிட்டால் வாக்குப்பதிவை ரத்து செய்யக்கூட தயங்கமாட்டோம் என தெரிவித்திருக்கிறது. கடைசியில் பணிந்து விட்டார் மம்தா.  மேற்கு வங்க முதல்வரின் செயல், தேர்தல் நடைமுறையில் சிக்கல் ஏற்படுத்தும் வ¤தத்தில் உள்ளது. உரிய வகையில் ஆணையம் அதிகாரத்தை செயல்படுத்தினால்தான் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியும். மாறாக, தன்முனைப்பு சிக்கலில் அதிகார போட்டியாக நினைத்து சவால் விடுவது முறையாகாது. அது ஜனநாயகத்துக்கே விடப்படும் சவால் போன்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►