இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டுவதற்கு முயற்சிப்பதாக
அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரையும்
கைதுசெய்வதற்காக இன்டர்போல் - சர்வதேச பொலிசாரிடம்
உஷார்ப்படுத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண
தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைளை மீண்டும் உருவாக்குவதற்கு உதவுபவர்கள்
தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிபடுத்துவது பற்றி வெளியாகியுள்ள
தகவல் குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவ சுற்றி வளைப்பின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவர் தொடர்பான விசாரணைகளில் நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோர் பின்னணியில் இருந்து செயற்படுவது பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தாக அவர் குறிப்பிட்டார்.
'வெளிநாடுகளில் இருக்கின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரையும் நாட்டில் உள்ள வேறு பலரையும், அத்துடன் தமிழ்க் குழுக்களையும் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து பிரச்சினைகளை உருவாக்குவதற்குத் தூண்டி வருகின்றார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.
இதற்கிடையில் சர்வதேச துணையுடன் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர் நந்தகோபாலிடம் அவருடைய உத்தரவின்பேரில் நாட்டில் கையாளப்பட்டுள்ள நிதி மற்றம் விடயங்கள் தொடர்பாக தாங்கள் விசாரணைசெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் கொல்லப்படுவதற்கு முன்பும், அவர்கள்
கொல்லப்பட்டதன் பின்னரும் இடம்பெற்ற விசாரணைகளில் இது
தெரியவந்திருக்கின்றது. இவர்கள் முன்னர் நாட்டில் இருக்கும்போது பல குற்றச்
செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு எதிராக
நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இவர்கள்
தொடர்பாக ஏற்கெனவே சர்வதேச பொலிசாரின் கவனத்திற்கும் கொண்டு
வரப்பட்டிருக்கின்றது. இப்போது அவர்கள் தேடப்படுகின்றார்கள் என்று மீண்டும்
சர்வதேச பொலிசருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது' என
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply