முல்லைத்தீவு விசுவமடு 12 ஆம் கட்டைப்
பகுதியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளையைச் சேர்ந்த 32 வயதான த. ராஜசுலோசனா
என்ற இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் கழுத்துப்
பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாள அட்டையை வைத்தே
பெண் பதுளையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் உயிரிழந்த பெண்
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் தையல் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்
எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இராணுவத்தின் ஓரு பிரிவாக செயற்படும்
சிவில் பாதுகாப்பு குழுவினர் செயற்படும் வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது என்றும் சடலத்தில் வெட்டுக்காயங்கள்
காணப்படுகின்றமையினால் இது கொலையாக இருக்கலாம் எனவும் பிரதேச மக்கள்
சந்தேகம் வெளியிட்டனர்.
சிவில் பாதுகாப்புக் குழுக்களின்
அலுவலகத்தில் எவரும் இருப்பதில்லை. தேவை ஏற்படும் போது சிவில் பாதுகாப்புக்
குழுக்கள் அந்த அலுவலகத்திற்கு வந்து செல்வதாக பிரதேச மக்கள்
தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை இரவு குறித்த
பிரதேசத்தில் அவலச் சத்தம் கேட்டது எனவும் கூறிய மக்கள் அதிகாலை குறித்த
இடத்துக்கு சென்றபோது ரத்தக் கறைகள் காணப்பட்டதுடன் கிணற்றில் பெண்ணின்
சடலம் மிதந்து கிடந்ததை அவதானித்ததாகவும் குறிப்பிட்டனர்.
சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஒருவரை
சந்திக்கச் சென்றபோது பெண்ணுக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம்
என்றும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டனர். பொலிஸாருக்கு அறிவித்தபோதும்
பொலிஸார் அப்பகுதி இராணுவ பொறுப்பதிகாரியின் துணையுடன் சம்பவ இடத்துக்கு
சென்றதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
பெண்ணின் சடலம் புதுக்குடியிருப்பு
வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட
பெண் வவுனியாவில் தங்கியிருப்பவர் என மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply