இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்
போது இந்திய இராணுவம் ஆற்றிய பங்கு குறித்து விசாரணை செய்யுமாறு கோரி
தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என இந்திய
உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கை
இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது இலங்கை இராணுவத்துக்கு
துணையாக இந்திய இராணுவம் அக்களத்தில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தியும், இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிறப்பு விசாரணை மன்றம் ஒன்றை அமைக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 15ம் திகதி பொது நலன் மனு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்சங்கர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா மற்றும் குரியன் ஜோசப் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
இதன்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் பிரபாகரன், பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற இது போன்ற ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினார்.
ஆனால் அவரது வாதத்தையும் கோரிக்கையையும் ஏற்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் இது இந்திய அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், நீதிமன்றம் நேரடியாக இதில் தலையீட முடியாது என்றும், தேவைப்பட்டால்
மனுதாரர் இது தொடர்பான நேரடி அதிகாரம் கொண்ட சம்பந்தப்பட்ட இந்திய
அரசுத்துறையிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply