இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்த தமிழக அரசு பரிந்துரைமீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும், இலங்கை – இந்திய
மீனவர் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த மாதம் 12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடத்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அரசின் தீர்மானம் கடிதமொன்றின் மூலம், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு, பண்ணை மற்றும் மீன்பிடி திணைக்களத்தின் செயலாளர் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழுவில், திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர்கள் பங்கேற்பார்கள் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் தொடர்பிலான தமிழக அரசாங்கத்தின் தீர்மானம், வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கைப் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தையின் முதற்கட்டம் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்றதுடன், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைகளை மார்ச் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், அந்தக் காலப்பகுதியில் அதிகளவிலான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை, மீனவர்கள் விடுவிக்கப்படாது தடுத்துவைக்கப்பட்டமை காரணமாக, இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டிருந்தன.
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தினை மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply