மிர்புர்உலக கோப்பையில் மோசமாக ஆடியதை நினைத்து ரசிகர்களை விட யுவராஜ்சிங் தான் மிகுந்த வேதனையில் இருப்பதாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார்.
டோனி பேட்டி
வங்காளதேசத்தில் நடந்த 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்று கோப்பையை கோட்டை விட்டது. யுவராஜ்சிங்கின் (21 பந்தில் 11 ரன்) மோசமான ஆட்டமே அணியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் டோனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– யுவராஜ்சிங் களத்தில் தடுமாறிக் கொண்டிருந்த போது ஏதாவது தகவல் அனுப்பினீர்களா?
பதில்:– இல்லை. அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அதிகபட்சமாக அதைத் தான் அவரால் செய்ய முடியும்.
கேள்வி:– அந்த சமயத்தில் அணிக்கு தேவையான உந்து சக்தியை யுவராஜ்சிங்கின் ஆட்டம் கொடுக்கவில்லையா?
பதில்:–இது அணி சம்பந்தப்பட்ட விஷயம். தனி நபர்கள் குறித்து பேச வேண்டாம்.
இதுவெல்லாம் சகஜம்
கேள்வி:– அனுபவம் வாய்ந்த, திறமையான யுவராஜ்சிங் போன்ற வீரர் ஆடிய விதத்தை கண்டு ரசிகர்கள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்திருப்பார்கள்?
பதில்:– ரசிகர்கள் கோபத்திற்குள்ளாகலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே ரசிகர்களை விட சோபிக்க தவறும் சம்பந்தப்பட்ட வீரர்கள் தான் மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். அந்த வகையில் யுவராஜ்சிங்கை விட வேறு யாரும் இன்றிரவு (நேற்று முன்தினம் இரவு) வருத்தம் அடைந்திருக்க முடியாது. ஒரு வீரராக, 40 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் யாரும் மோசமாக விளையாட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். கேட்ச்சை நழுவ விடக்கூடாது. பீல்டிங்கை தவற விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். ஆனால் எதுவும் எங்களுக்குரியதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுவெல்லாம் சகஜம். இது போன்ற நிலைமை மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறோம். யுவராஜ்சிங் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தார். ஆனால் இது அவருக்குரிய தினமாக இல்லை. அதே சமயம் ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடுவது கடினம்.
கேள்வி:– யுவராஜ்சிங்குக்கு முன்பாக சுரேஷ் ரெய்னாவை ஆட வைத்திருக்கலாமே?
யுவராஜின் எதிர்காலம்
பதில்:– சுரேஷ் ரெய்னா, களம் இறங்கிய முதல் பந்தில் இருந்தே விரட்டியடிக்க தொடங்கி விடுவார். மற்றபடி அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிது நேரம் நிலைநிறுத்தி கொண்ட பிறகு அதிரடி காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த காரணத்திற்காகத் தான் யுவராஜ்சிங்கை 4–வது வரிசையில் களம் இறக்க விரும்பினோம். அது மட்டுமின்றி அந்த சமயத்தில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் (ரோகித் ஷர்மா, விராட் கோலி) விளையாடிக் கொண்டிருந்தனர். வலக்கை–இடக்கை பேட்ஸ்மேன்கள் இணைந்து விளையாடும் போது அது எதிரணி பவுலர்களுக்கு வியூகம் அமைப்பதில் சிரமத்தை அளிக்கும். இதுவும் யுவராஜ்சிங்கை முன்வரிசையில் அனுப்பி வைத்ததற்கு ஒரு காரணம்.
கேள்வி:– அணியில் யுவராஜ்சிங்கின் எதிர்காலம் குறித்து...?
பதில்:– இந்த சீசனுக்கான இந்திய கிரிக்கெட் போட்டிகள் முடிந்து விட்டன. இனி நாங்கள் ஐ.பி.எல். உள்பட உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளோம். அடுத்த சர்வதேச போட்டிக்கான அணித்தேர்வுக்கு நீண்ட காலம் உள்ளது. எனவே அது பற்றி பேசாதீர்.
கேள்வி:– ஆட்டம் எப்போது கை நழுவி போனதாக நினைக்கிறீர்கள்?
பதில்: மிடில் ஓவர்களில். எங்களது பேட்ஸ்மேன்கள் முழு திறமையை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் எங்களது ஆட்டம் ‘கிளிக்’ ஆகாத நாட்களில் இதுவும் ஒன்று. விராட் கோலி மட்டுமே (77 ரன்) தொடர்ச்சியாக ரன் சேகரித்துக் கொண்டிருந்தார். கடைசி 4 ஓவர்களில் (வெறும் 19 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது) எங்களது பேட்டிங் சரியில்லை. நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலான 15 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.
யார்க்கரில் மிரட்டினர்
கேள்வி: இலங்கையின் பந்து வீச்சு எப்படி இருந்தது?
பதில்:– இலங்கை பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டத்தை களத்தில் கன கச்சிதமாக செயல்படுத்தினர். எங்கள் அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு இறுதி கட்டத்தில் தான் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களால் ‘ஸ்கூப்’ அல்லது ‘பட்டில் ஷாட்’டுகளை தேர்டுமேன் அல்லது பைன் லெக் பகுதிக்கு அடிக்க முடியவில்லை. இலங்கை பவுலர்கள் தங்களது ‘யார்க்கர்’ பந்து வீச்சை துல்லியமாக வீசினர். குறிப்பாக மலிங்கா, ஆப்–ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக வீசி எங்களை கட்டுப்படுத்தினார். இது போன்ற ஷாட்டுகளை அடிக்காவிட்டால் அதன் பிறகு யார்க்கர் தாக்குதலும் தொடுக்கப்படும் பட்சத்தில், பேட்ஸ்மேன்கள் திணறத்தான் செய்வார்கள். அது தான் கடைசி 4 ஓவர்களில் நிகழ்ந்தது.
இவ்வாறு டோனி கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply