வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.
உலக கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. உலக மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில்
ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் மிர்புர் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கின்றன.
தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் மரண அடி, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சறுக்கல் என்று தொடர்ச்சியான தோல்விகளால் நம்பிக்கையற்று துவண்டு போய் கிடந்த இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையில் திடீரென விசுவரூபம் எடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறது. சூப்பர்–10 சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பந்தாடிய இந்திய அணி அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவை விரட்டியடித்தது.
இறுதிப்போட்டிக்குள் காலடி பதித்திருப்பதால் இப்போது எல்லோர் கவனமும் இந்திய அணி மீது திரும்பி யிருக்கிறது. முந்தைய ஆட்டங்களில் பேராதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் இவ்விரு அணிகளும் ஒரே மாதிரியான பலம், பலவீனங்களை கொண்ட அணிகள். அது மட்டுமின்றி இங்குள்ள சூழலும் இரு அணிகளுக்குமே அத்துப்பிடி. எனவே போட்டி நாளில் சிறு தவறுக்கும் இடமின்றி விளையாடும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.
நம்பிக்கை நாயகன் கோலி
இந்திய வீரர்கள் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்திருப்பது புது தெம்பை அளித்துள்ளது. விராட் கோலி 3 அரைசதம் உள்பட 242 ரன்கள் குவித்து தொடரில் முன்னிலை வகிக்கிறார். ‘கேரம்’ வகை யுக்தியில் மிரட்டி வரும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், ஓவருக்கு சராசரியாக 4.91 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது சிக்கனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் தாக்குப்பிடித்து நல்ல தொடக்கம் தருவது அவசியம். அவர்கள் சிறப்பாக ஆடி விட்டால், நடுவரிசை வீரர்களின் சுமை குறைந்து, எதிரணிக்கு பலத்த நெருக்கடி கொடுக்க முடியும்.
சாதனையை நோக்கி டோனி
2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி இந்த முறையும் வாகை சூடினால், 20 ஓவர் உலக கோப்பையை இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற சிறப்பை பெறும்.
அது மட்டுமின்றி, கேப்டன் டோனியின் புகழும் வானளாவிய உயரத்திற்கு சென்று விடும். டோனியின் தலைமையில் இந்திய அணி 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் வென்றிருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால், மூன்று உலக கோப்பையை வென்று தந்த ஒரே கேப்டன் என்ற சரித்திரம் பேசும் சாதனையாளராக மாறி விடுவார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையை தலா 2 முறை வென்றதே அதிகபட்சமாக உள்ளது.
உணர்ச்சி பிடியில் இலங்கை
எப்படியாவது இந்த முறை உலக கோப்பையை சொந்தமாக்கி விட வேண்டும் என்பதில் இலங்கை வீரர்கள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். மூத்த வீரர்கள் மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா இருவரும் இந்த ஆட்டத்துடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருப்பதால், உணர்ச்சிப்பூர்வமாக காணப்படுகிறார்கள். அவர்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அணி பல்வேறு விதமான வியூகங்களை தீட்டி வருகிறது.
சில ஆண்டுகளாக இலங்கை அணிக்கு, உலக கோப்பை இறுதிசுற்று என்றாலே ‘ஏழாம் பொருத்தம்’ தான். 2007, 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலககோப்பை இறுதி ஆட்டத்திலும், 2009, 2012–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் இலங்கை அணி மண்ணை கவ்வியது. இதனை கவனத்தில் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் கோப்பையை வென்றால் ரூ.6 கோடி போனஸ் தருவதாக அறிவித்திருக்கிறது.
கேப்டன் மலிங்கா
வழக்கமான கேப்டன் தினேஷ் சன்டிமால் ஒதுங்கிக் கொண்டதால், இந்த மோதலிலும் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா இலங்கை அணியை வழிநடத்த இருக்கிறார். இலங்கை அணி பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக திகழ்ந்தாலும் கடந்த சில ஆட்டங்களில் அவர்களின் பவுலர்கள் தான் அமர்க்களப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்–10 சுற்று லீக்கில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். பேட்டிங்கில் மேத்யூஸ் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்றதாக உள்ளது. இருப்பினும் ஒருங்கிணைந்து விளையாடுவதால் எதிரணியை எளிதில் அடக்கி விடுகிறார்கள்.
மொத்தத்தில் இது உலக கோப்பையின் ‘இறுதியுத்தம்’ என்பதால் இரண்டு தரப்பு வீரர்களுமே நீயா–நானா? என்று கடுமையாக மல்லுகட்டுவார்கள். எனவே சுவாரஸ்யமான ‘விருந்தை’ ருசிக்க ரசிகர்களாகிய நாம் தயாராவோம். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது 400–வது ஆட்டம் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மழை வாய்ப்பு?
போட்டி நடக்கும் மிர்புரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலைஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை மழையால் ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால் மறுநாள் (ரிசர்வ் நாள்) நடைபெறும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ரோகித் ஷர்மா, ரஹானே, விராட் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது முகமது ஷமி.
இலங்கை: குசல் பெரேரா, தில்ஷன், மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா, திரிமன்னே, மேத்யூஸ், மலிங்கா (கேப்டன்), ஹெராத், குலசேகரா, செனநாயக்கே, பிரசன்னா அல்லது திசரா பெரேரா அல்லது அஜந்தா மென்டிஸ்.
மாலை 6.30 மணிக்கு தொடக்கம்
மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சாம்பியன் கோப்பையை தனதாக்கும் அணிக்கு ரூ.6 கோடியே 70 லட்சமும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடியே 35 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இதுவரை...
இந்தியாவும், இலங்கையும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3–ல் இந்தியாவும், 2–ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதே போல் ஒட்டுமொத்தத்தில் (ஒரு நாள் போட்டியையும் சேர்த்து) 19 இறுதி ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 9–ல் இந்தியாவும், 8–ல் இலங்கையும் சாம்பியன் ஆகியுள்ளன. எஞ்சிய இரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
கோப்பையை வெல்வோம் –டோனி
இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:–
இலங்கை அணி அண்மை காலங்களில் 4 உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் (50 ஓவர் உலக கோப்பையையும் சேர்த்து) தோற்று இருப்பதால் அது இந்திய அணிக்கு மனதளவில் கொஞ்சம் சாதகமான அம்சம்தானே? என்று கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் புள்ளி விவரங்கள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. சாதனைகளை பற்றி நினைக்காமல் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவதே முக்கியம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் எப்படி ஆடினோமோ அதையே இறுதி ஆட்டத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறோம். அதில் தான் எங்களது கவனம் உள்ளது. கோப்பையை வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.
சில ஆண்டுகளாக கேப்டனாக இருந்து நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். சர்ச்சைகள் என்பது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அங்கமாகி விட்டது. இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் (ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை) எதுவாயினும் அதில் எனது பெயர் இல்லாமல் இருக்காது. என்னை பொறுத்தவரை நெருக்கடியை மைதானத்திலேயே விட்டு விட வேண்டும் என்று விரும்புகிறேன். அது தான் நல்லது.
இவ்வாறு டோனி கூறினார்.
இந்த உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், ஒரு நாள் போட்டி உலக கோப்பை, மினி உலக கோப்பை (ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை), 20 ஓவர் உலக கோப்பை அனைத்திலும் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வர முடியும். 20 ஓவர் அணியின் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்.
கோலியை குறி வைக்கும் மலிங்கா
இலங்கை கேப்டன் லசித் மலிங்கா கூறியதாவது:–
இந்திய வீரர் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதை அறிவோம். சிறந்த வீரராக இருந்தாலும் கூட அவரை வீழ்த்துவதற்கு ஒரே ஒரு நல்ல பந்து போதும். அப்படிப்பட்ட பந்தை வீசுவதற்குரிய திறமையான பந்து வீச்சாளர் எங்கள் அணியில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பெரிய விஷயமல்ல. ஏனெனில் அது வெறும் பயிற்சி ஆட்டம். ஆனால் சர்வதேச போட்டி என்பது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவற்றில் இருந்து வித்தியாசமானவை. அதிலும் இது இறுதிப்போட்டி. அதிக பதற்றம் இருக்கும். இந்த நாளில் யார் நேர்த்தியாக ஆடுகிறார்களோ? அவர்களிடம் வெற்றி வசப்படும்.
ஜெயவர்த்தனேவுக்கும், சங்கக்கராவுக்கும் இது கடைசி 20 ஓவர் போட்டி என்பதால் எங்களுக்கு நாளைய (இன்று) தினம் சிறப்பு வாய்ந்த நாள். அவர்களுக்கு நாங்கள் ஏதாவது சிறப்பு (வெற்றிப்பரிசு) செய்தாக வேண்டும்.
ஆசிய கோப்பையை நாங்கள் இங்கு வென்றோம். எங்களது திறமையை நிரூபித்து காட்டுவதற்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. முழு திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளோம்.
இவ்வாறு மலிங்கா கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply