5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி பேட்டரி ஆயுள் நாளை (திங்கட்கிழமை) காலாவதியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பெட்டி தேடல்
எனவே நாளைக்குள் அந்த கறுப்பு பெட்டியை மீட்டால்தான், விமானம் விபத்துக்குள்ளான போது நடந்த நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரிய வரும்.எனவே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுகிற இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக் கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று
தேடி வருகின்றன.
சிக்னல் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் அந்தக்கப்பலை தேடிவருகிற சீனகப்பல் ‘ஹாய்ஸன் 01’, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இருந்து மாயமான விமானத்தினுடையது என கருதப்படுகிற உயிர்த்துடிப்பு சமிக்ஞையை (கறுப்பு பெட்டி சிக்னலை) கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த சிக்னல், இந்தியப் பெருங்கடலில் 25 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும், 101 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து வினாடிக்கு 37.5 கிலோஹெர்ட்ஸ் என்ற வேகத்தில் வந்ததாக தெரிய வந்துள்ளது.
3 மாலுமிகள் கேட்டனர்
இந்த சிக்னலை சீனகப்பல் ‘ஹாய்ஸன் 01’–ன் மாலுமிகள் 3 பேர் கேட்டுள்ளனர். ஆனால் அவை திடீரென வந்து சென்று விட்டதால் பதிவு செய்ய முடியாமல் போய் விட்டதாம். மேலும், இந்த சமிக்ஞை, மாயமான மலேசிய விமானத்திற்கு உரியதுதானா என்பது இனிமேல்தான் உறுதி செய்யப்பட வேண்டும்.இதற்கிடையே மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடிவரும் சீன விமானப்படை விமானம் ஒன்று, கடலில் மிதக்கிற பொருட்களை கண்டறிந்துள்ளது. அவை படமும் எடுக்கப்பட்டுள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகளா என ஆராயப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply