காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில்
சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து
தவிக்கின்றனர்.
வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள 4
பிராந்தியங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.அங்கு மழை வெள்ளத்தில் இதுவரை 101 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து, உணவு இன்றி தவித்து வருகின்றனர். வடக்கு பிராந்தியமான ஜாவ்ஸ்ஜானில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகிய 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். இங்கு மீட்பு பணிகளில் ஈடுபடுவது மிகவும் கடினமாக உள்ளது.
இதுவரை 1,500 பேரை ஹெலிகாப்டர் மூலம் மழை வெள்ளத்தில் இருந்து மீட்டிருக்கிறோம் என்று போலீஸ் அதிகாரி பாகூர் முகமது ஜாவ்ஸஜானி கூறினார். பர்யாப் பிராந்தியத்தில் மழை வெள்ளத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி 80 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இப்பிராந்தியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன.
எங்களுக்கு ஆப்கன் அரசு மற்றும் அவசர கால மீட்பு குழுவின் உதவி அவசியம் தேவைப்படுகிறது என்று பிராந்திய கவர்னர் முகமதுல்லா பாத்சான் கூறினார். தவிர, பாத்கியாஸ் மற்றும் சர் இ போல் ஆகிய 2 பிராந்தியங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply