புதுச்சேரிக்கு அருகே உள்ள கீழ்ப்புத்துப்பட்டு கிராமம் மற்றும் வேறு சில அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய படகை சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.
இந்த பிரச்சினை குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் நேற்று புதுடிலிக்கு விஜயம் மெற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து 157 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றியதாக ஸ்கொட் மொறிசன் இந்த சந்திப்பின்போது கூறியுள்ளார்.
இந்தியாவிற்குள் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக குடிபுகுவதையோ, அல்லது இந்தியாவிலிருந்து யாரும் சட்டவிரோதமாக குடிஅகல்வதையோ இந்திய அரசாங்கம் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய இந்திய அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் புகலிடம் கோருவதற்காக அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் தொடர்பான பிரச்சினை சட்டரீதியாகவும் மனிதாபிமான ரீதியிலும் கையாளப்பட வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளால் சிறுவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply