blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, October 19, 2015

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி காலமானார்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி  ஞாயிறு (18-10-2015)  அதிகாலை காலமானார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது.
கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தபோது தமிழினி கைது செய்யப்பட்டார்.

இளைஞர்களை, குறிப்பாக யுவதிகளுக்குப் பயிற்சி வழங்கியதாகவும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான இவர் அரசியலில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இவரை தேர்தலில் போட்டியிடச் செயற்வதற்காக அரச தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அப்போது பரவலாக பேசப்பட்டது.

ஆனால், தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமைதியான முறையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
 
அதன்படி, திருமணம் முடித்து வெளிச் சமூகத் தொடர்புகள் எதுவுமின்றி அமைதியான முறையில் தமிழினி வாழ்ந்து வந்தார். இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தகவல்கூட வெளியில் வரவில்லை. நோய் முற்றி அவர் மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானதாக கூறப்படுகிறது.

தமிழினியின் சடலத்தை அவரது சொந்த ஊரான பரந்தனுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவருடைய கணவனும் தாயாரும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அவருடைய இறுதிக்கிரியைகள் பரந்தனில் இடமபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Thank You BBC

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►