blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, August 13, 2015

இலங்கைத் தேர்தல்: பெண்கள் பங்களிப்பு போதாமைக்கு என்ன காரணம்?

இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதம் பெண்களாக இருந்தும் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.


அரசியலில் நேரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் அனைத்துமே, குறைவான பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிப்பதில் ஒன்றுபட்டு செயற்படுவதாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளானாலும் சரி, வடகிழக்கில் போட்டியிடும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளானாலும் சரி, மலையகக் கட்சிகளானாலும் சரி, மிகக்குறைந்த அளவே பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் போட்டியிடம் வாய்ப்பளித்துள்ளனர்.
 
இந்த தேர்தலில் மட்டுமல்ல இலங்கையின் அரசியலிலும் அதன் மூலம் உருவாக்கப்படும் பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது தொடர்ந்தும் குறைவாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக ஐந்து சதவீதம் என்கிற அளவுக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது.

அதேசமயம், இலங்கை நாடாளுமன்றத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களையும் சேர்த்துக் கணக்கிடும்போது பெண்களின் பிரதிநித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.
அரசியில் ஈடுபட வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பெண்கள் மத்தியில் ஆர்வம் இருந்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு வாய்ப்பளிப்பதில்லை என ஒரு சாரார் கூறுகிறார்கள்.

இலங்கை அரசியலிலும், தேர்தல் நடைமுறைகளிலும் காணப்படும் வன்முறை போக்குகள், மதுபான பாவனை உள்ளிட்ட பல்வேறுவிதமான மோசமான நடைமுறைகளும் பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு தடையான காரணிகளாக வேறு சில பெண்ணியவாதிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது.

மேலும் நடைமுறை அரசியலில் காணப்படும் பெண் எதிர்ப்பு மனோபாவம், ஆணாதிக்க சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகள், அவற்றால் விளையும் கசப்பான அனுபவங்களினால் தான் தனது பார்வையில் பெண்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வதாக கூறுகிறார் தேவை நாடும் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கணிசமான பெண்கள் கலந்து கொண்டாலும் அவர்களின் அரசியல் ஈடுபாடாக அதனைக் கருத முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த காலத் தேர்தல்களில் பெண்களின் வாக்களிப்பு சதவீதம் குறைவு என ஒரு சாரார் தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தக் கூடிய புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் அதை அனுமானமாகவே பார்க்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதுவும் தவிர, தேர்தல்களில் வாக்களிக்கும் பெண்களின் வாக்களிக்கும் தேர்வு என்பதும் பல சமயங்களில் அவர்களின் சுயாதீனத் தேர்வாக இருப்பதில்லை என்கிற விமர்சனங்களும் நீடிக்கின்றன.

ஒரு குடும்பத்தில் இருக்கும் கணவன், தந்தை, சகோதரன் அல்லது மகன் என்கிற ஆணின் தேர்வே அந்த குடும்பத்தின் பெண்களின் வாக்களிக்கும் தேர்வாக இருப்பதாக வாக்களிக்கும் பெண்களில் சிலரே பிபிசியிடம் தெரிவித்தனர்.

இலங்கை அரசியலில் காணப்படும் இந்த நிலைமை மாறவேண்டுமானால், அரசியல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில் பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு தேவை என்கிற கோரிக்கைகளை சில பெண்ணிய செயற்பாட்டாளர்கள் முன் வைக்கிறார்கள்.

இத்தகைய இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு பெண் வாக்காளர்கள் மத்தியில் பரவலான ஆதரவு காணப்பட்டாலும், இதற்கான சட்டம் இயற்றும் சபைகளில் நிறைந்திருக்கும் ஆண்கள் இதை அனுமதிப்பார்களா என்கிற கேள்விக்கு மட்டும் உரிய விடை யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Thank You - BBC- Tamil

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►