ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால், இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் சட்டத்தில் மாற்றம்
இலங்கையில் கடந்த 2005-ம் ஆண்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ச, 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்ட போரில் வெற்றி பெற்றதன் மூலம், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்.
அதன்படி 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பலத்த எதிர்ப்பு எதுவுமின்றி வெற்றி பெற்று 2-வது முறையாகவும் ஜனாதிபதியானார்.
2-வது முறையாக வெற்றி பெற்றதும், மீண்டும் தேர்தலில் போட்டியிட வசதியாக அரசியல் சட்டத்தை திருத்தினார். மேலும் அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்தினார்.
மைத்ரிபால சிறிசேனா
ராஜபக்சேவின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கூட்டணியிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதைப்போல அரசின் முக்கிய பொறுப்புகளை ராஜபக்சேவின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருப்பதும், கூட்டணி தலைவர்களுக்கு மேலும் மேலும் பிடிக்கவில்லை.
இதனால் ராஜபக்சேவின் ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகளும், பல எம்.பி.க்களும் விலகத்தொடங்கினர். இதில் முக்கியமானவர்தான் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியின் பொதுச்செயலாளரும், சுகாதார மந்திரியுமான மைத்ரிபால சிறிசேனா.
முன்கூட்டியே தேர்தல்
தனது செல்வாக்கு சரிவதை உணர்ந்த ராஜபக்சே, விடுதலைப்புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறும் நோக்கில் மீண்டும் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார். அதன்படி வருகிற 8ந் திகதி (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கவிருக்கின்றது.
இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே மைத்ரிபால சிறிசேனாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் களம் மேலும் சூடு பிடித்தது. இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு
கிராமப்புறங்களில் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரிடம் ராஜபக்சேவுக்கு ஆதரவு காணப்படுகிறது. இது எதிர்க்கட்சி வேட்பாளருடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியும் அவருக்கு சாதகமான அலைகளையே ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ரகசிய கூட்டங்கள்
எனினும் ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டுள்ளதாலும், அவரது கட்சி எம்.பி.க்களே தொடர்ந்து எதிர்க்கட்சி வேட்பாளரிடம் தஞ்சமடைவதாலும் இந்த தேர்தலில் அவருக்கு கடும் போட்டி ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ராஜபக்சேவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளும் அடிக்கடி ரகசிய கூட்டங்கள் நடத்தி திட்டங்களை வகுத்து வருகின்றன.
சிறிசேனா தனது பிரசாரத்தில், ராஜபக்சே குடும்பத்தினரின் அரசியல் தலையீட்டை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் வளங்களையும், அரசியல் கட்சியின் நிர்வாகத்தையும் ஒரு குடும்பமே கைப்பற்றி உள்ளது’ என்று தெரிவித்தார்.
தமிழர் தேசிய கூட்டணி
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள புத்தப்பிரிவை சேர்ந்தவர்கள். எனவே தேர்தலில் இவர்களின் வெற்றி வாய்ப்பு அங்குள்ள முஸ்லிம் மற்றும் தமிழர்களின் ஓட்டுகளில்தான் அடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு நடந்த வன்முறைகளால், ராஜபக்சே மீது முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதைப்போல தமிழர் தேசிய கூட்டணியும் சிறிசேனாவுக்கு ஆதரவை வழங்கி உள்ளது.
ஆனாலும் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சி முகாமில்தான் இருந்தன. அந்த தேர்தலில் ராஜபக்சே 58 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply