blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, December 1, 2014

“முஸ்லிம்கள் எதற்கும் அச்சம் அடையத் தேவையில்லை”: கோட்டாபய

Gotabaya[1]நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னாலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதால்
முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு நூற்றுக்கு ஐநூறு வீதமான பாதுகாப்பை வழங்குவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் என்றும் தயாராக இருப்பதாகவும் முஸ்லிம்கள் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேருவளை சீனன்கோட்டை எம். எஸ். எம். பZல் ஹாஜியார் மாவத்தை யிலுள்ள முன்னாள் பேருவளை நகர பிதா மர்ஜான் பZலின் இல்லத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுடனான விசேட கலந்துரையாடலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பேருவளை நகர பிதா மில்பர் கபூர் வரவேற்புரை நிகழ்த்திய இக்கூட்டத்தில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த பெருந்திரளான ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, ரோஹித்த அபேகுணவர்தன, பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, மேல் மாகாண சபை உறுப்பினர்களான பியல் நிசாந்த. பிரசன்ன சஞ்ஜீவ, முன்னாள் நகரபிதா மர்ஜான் பZல் உட்பட நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவந்த போது அரபு நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருந்ததை எம்மால் மறுக்க முடியாது.

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதையும் மறக்கமுடியாது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர்தான் ஜனாதிபதிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை தூரமாக்குவதற்கு சில தீய சக்திகள் கங்கணங்கட்டி செயல்பட தொடங்கின. பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இவ்வாறான போலியான பிரசாரங்களின் மூலம் மூஸ்லிம் மக்களின் ஆதரவை தம் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கு சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

கொழும்பிலுள்ள சேரி வாழ் குடிசைகளை அகற்றி மாடி வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி தலைநகரை அழகுபடுத்தி வருகின்றோம்.

கொழும்பிலுள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதாக பொய்யான பிரசாரங்களையும் மேற்கொண்டனர். ஓலைக் குடிசைகளை அகற்றி இதுவரை 5000 க்கும் அதிகமான வீடுகளை அமைத்துள்ளோம். அமைக்கப்பட்ட 5000 வீடுகளில் கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் எழும்போது உலமா சபையுடன் அடிக்கடி கலந்துரையாடியுள்ளேன். உலமா சபையும் அடிக்கடி இந்நாட்டு முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக என்னுடன் கலந்துரையாடியுமுள்ளனர்.

அழுத்கமை சம்பவத்தில் சேதமுற்ற பள்ளிவாசல், வீடுகள், வர்த்தக நிலையங்கள் கூடியகதியில் மீள்புனரமைக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் பொய் பிரசாரங்களைச் செய்து முஸ்லிம்களை திசைதிருப்ப முனைவது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தின் காலத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

அக்காலத்தில் நாம் செய்ததைப்போன்று மீள்புரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை.

சமாதானத்தின் மூலமே நாட்டில் வலுவான அபிவிருத்தியை ஏற்படுத்தலாம். 30 வருட கால பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் தூரநோக்கு துணிச்சல் மிக்க தலைமைத்துவத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. இன்று வட, கிழக்கில் இயல்பு வாழ்க்கை உதயமாகியுள்ளது.

பாடசாலைகள். அரச – தனியார் நிறுவனங்கள் சீராக இயங்குகின்றன. அபிவிருத்தி பணிகள் செவ்வனே இடம்பெறுகின்றன. மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கிறார்கள். பல்வேறுபட்ட தொழில்துறைகளுக்குச் செல்வோர் தொழிலை சிறப்பாக செய்து வருகின்றனர்.

பல்வேறு தியாகங்கள், சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சமாதானத்தை தவிடுபொடியாக்கி விட முடியாது.

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு இரண்டாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது.

யுத்த சூழ்நிலை நீங்கியதன் பின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரியளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறு சிறு பிணக்குகள் ஏற்படும் போது சிவில் சமூகம், மத தலைவர்கள் சேர்ந்து கலந்துரையாடி நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

பூதாகரமாவதற்கு இடமளிக்கக் கூடாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

முஸ்லிம்கள் என்றும் இந்நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகின்றனர்.


ஒருவரையொருவர் சந்தேகம் கொண்டு பார்க்கக் கூடாது. அதன் மூலம் தப்பான அபிப்பிராயம் ஏற்படுகிறது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►