blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, December 11, 2014

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-பாதுகாப்புச் செயலர் சந்திப்பு: ஹக்கீமின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது.

ரவூப் ஹக்கீமிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரிடையே முக்கிய சந்திப்பொன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது என நீதி அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான அக்கட்சியின் குழுவினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையொன்றின்போது, அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சில், திங்கள் கிழமை பிற்பகல் 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரை நடைபெற்ற சந்திப்பின் போது, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் நிலவும் காணி, மீன்பிடி, மற்றும் பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மிலிந்த மொரகட, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பஷீர் உட்பட மேலும் சிலரும் பங்குபற்றினர்.
திருகோணமலை புல்மோட்டைப் பிரதேசித்தில் 500 ஏக்கர்களைக் கொண்ட அரிசிமலை காணி பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதாக தெரிவிக்கப்பட்டதோடு, பொன்மலைக்குடா பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சுனாமி வீடுகளை உடனடியாக மீட்டுத் கொடுக்கும்படி கடற்படைத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், புல்மோட்டையில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் ஆரம்பிக்கப்படவிருந்த படையினருக்கான ரணவிரு கம்மான எனப்படும் இராணுவத்துக்கான கிராம திட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இராணுவத் தளபதி, கிழக்கு மாகாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதிக்கும் இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை, கரிமலையூற்று பள்ளிவாசலை மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறும், அந்த பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாஸ் முறையை உடனடியாக நீக்கிவிடுமாறும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்குச் சொந்தமான இரண்டு கரைவலைபாடுகளையும் அவற்றிற்கு உரியவர்களிடத்தில் உடனடியாக ஒப்படைத்து விடுமாறும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதிக்கு உத்தரவிடப்பட்டது.
தோப்பூர், செல்வநகர் காணி சம்பந்தமான பிரச்சினை முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பொழுது அதனை உடனடியாக தீர்த்து வைக்குமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஆலிம்சேனை காணிப்பிரச்சினை, சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி விவசாய நிலம் தொடர்பான பிரச்சினை என்பவற்றுக்கும் ஏனைய சில பிரதேசங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நிர்வாக பிரச்சினைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினருடன் நடாத்தவுள்ள கலந்துரையாடலின் போது, உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினரால் ஆண்டியா புளியங்குளத்தில் வேலியடித்து வேறாக்கப்பட்ட காணியை பாடசாலைக்கு வழங்கிவிடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►