blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, December 2, 2014

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று 100 நாட்களில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் இவை தான்!

பொது எதிரணியின் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் இவை தான்சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
என பொது எதிரணி தலைவர்கள் நேற்றுக் கொழும்பில் கைச்சாத்திட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களில் இல்லாதொழித்து மக்களுக்குப் பொறுப்புக்கூறும் நாடாளுமன்ற முறைமை ஸ்தாபிக்கப்படும் என்றும், அரசமைப்புக்கான 18ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் உருவாக்கப்படும் எனவும் அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று 100 நாட்களில் செயற்படுத்தப்படும் திட்டங்களும் அதன் பின்னர் உருவாக்கப்படும் அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஆட்சியில் முன்னெடுக்கப்படும் விடயங்களும் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஜனநாயக ரீதியிலான, மக்கள் சார்பான ஆட்சிக்கான பொது மக்களின் நிகழ்ச்சி நிரல் என்ற கருப்பொருளிலேயே இந்தப் பொது வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் நேற்று எதிர்க்கட்சிகளினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்ட பொது வேலைத்திட்டத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் வருமாறு:- 

இலங்கையர்கள் என்ற வகையில் நாம் பாரதூரமான சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். பல தசாப்தங்களுக்கு முன்னர் உலகத்தின் சிறந்த முன்னுதாரணமான ஜனநாயக நாடாக இலங்கை இருந்தது. 

ஆனால், இன்று – மிகத் துரிதமாக – இலங்கையில் வாழும் பிரஜைகள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இத்துன்பியல் நிலைமை பின்வரும் காரணங்களாலேயே ஏற்பட்டது. 

* சட்டத்தின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சி கண்டமை. * ஆட்சிக்கு அத்தியாவசியமான ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டுள்ளமை. 

* சமூக சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து, சமூக அநீதி, சமூக முறைமையின் அடிப்படைக் குணாம்சமாக மாறியுள்ளமை. 

* பல்வகை இனத்துவ, மத குழுக்களிடையே சகவாழ்வு வீழ்ச்சியடைந்து ஒற்றுமையீனமும், நம்பிக்கையீனமும் வியாபித்துள்ளமை. 

இந்நிலைமையை கவனத்திலெடுத்து நாட்டில் மீண்டும் நல்லாட்சியையும், சமூக நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்படுகிறது. 

இதற்கமைய தற்போதைய ஜனநாயக விரோத, ஏகபோக, ஊழல் மிகுந்த ஆட்சியந்திரத்தைத் தோல்வியுறச்செய்து மேற்கூறிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எல்லோரும் இணங்கக்கூடிய பொதுவேட்பாளரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டுவதற்கும் அதன் பின்னர் 100 நாட்களுக்குள் குறுகியகால வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்ற ஆட்சியை அமைத்து புதிய நாடாளுமன்றத்தின்கீழ் ஏனைய குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் இதன்மூலம் முன்மொழியப்படுகிறது. 

அதேசமயம், பின்வரும் உடனடி நடவடிக்கைகளையும் இலக்குகளையும் வெற்றிகொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வகட்சி அரசு ஒன்று அமைக்கப்படும். 

உடனடிக் குறிக்கோள்கள்: 

1. தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் முழுமையாக இல்லாதொழித்து மக்களுக்கு வகைப்பொறுப்புக்கூறும் நாடாளுமன்ற முறைமையை ஸ்தாபித்தல். 
புதிதாக உருவாக்கப்படும் நாடாளுமன்ற ஆட்சியில் ஜனாதிபதி, அரசின் தலைவராகச் செயற்படுவதோடு, ஜனாதிபதிப் பதவிக்கு அதற்கேற்ற வகையில் வகைப்பொறுப்பும், அதிகாரங்களும் வழங்கப்படும். ஜனாதிபதிப் பதவியை நாட்டின் தேசிய ஐக்கிய சின்னமாக ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

2. அரசமைப்புக்கான 18ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படும். ஜனநாயக ஆட்சிமுறைக்கு அத்தியாவசியமான நீதித்துறை, பொலிஸ் சேவை, அரச சேவை, தேர்தல் அதிகாரிகள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற பதவிகள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆணைக்குழுக்களின் சுயாதிபத்தியத்தை மீண்டும் ஏற்படுத்தி வலுப்படுத்துதல். 

3. விகிதாசாரத் தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு சகல தேர்தல் தொகுதிகளிலும் தமக்கொரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைக்கும் வகையில் – சகல மக்கள் பிரிவினரது, அரசியல் கருத்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் பழைய நாடாளுமன்றத் தேர்தல் முறையினதும், விகிதாசார முறையினதும் கலவையாகப் புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும். 

4. மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்துவதற்கு வாழ்க்கைச் செலவுப்படிக்கு ஏற்ப அரச மற்றும் தனியார்துறையில் விவரமான சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பொருளாதாரத்தின் கைத்தொழில், விவசாயம், பெருந்தோட்டம், மீன்பிடி, சிறு கைத்தொழில்கள் போன்ற துறைகள் வலுவூட்டப்படும். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துதல், சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள வறிய மக்களை – குறிப்பாக, பெண்கள், பிள்ளைகள், மூத்தோர், ஓய்வூதியம் பெறுவோர், ஊனமுற்றோர் ஆகிய அனைத்துப் பகுதியினரையும் இலக்காகக்கொண்டு விசேட வலுமிகுந்த சமூகப் பாதுகாப்புவலையொன்று ஸ்தாபிக்கப்படும். இதற்கு மேலதிகமாக உத்தேச 100 நாட்களுக்குள் பின்வரும் இலக்குகளை வெற்றிகொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பித்துவைக்கப்படும். 

* முன்னெப்போதும் இல்லாத வகையில் நிகழும் பாரிய அளவிலான மோசடிகள், ஊழல்கள், இலஞ்ச நடவடிக்கைகள், கொமி­ன் வாங்குதல் என்பவற்றை ஒழிக்கவும், பொதுமக்களின் பணம் வீண்விரயமாக்கப்படும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கும் இறுக்கமான வெளிப்படைத்தன்மையும், வகைப்பொறுப்பும் கொண்ட ஒரு வழிமுறையை உருவாக்குதல். அதேசமயம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள துஷ்பிரயோகங்களையிட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தல். 

* சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை வழங்குதல், நல்லாட்சியின் கீழ் நிலைபேறான அடிப்படையில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபித்தல், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்துதல், ஊடகச் சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை உட்பட கருத்துகளை வெளியிடும் உரிமையை உறுதிசெய்தலும் மனித கெளரவத்துடன் வாழ்வதற்குமான உரிமையை உறுதிசெய்தல். 

* எல்லோரும் மனித கெளரவத்துடன் வாழக்கூடிய உரிமையை மேலும் வலுவூட்டுவதற்காக நலன்புரி அரசை மீண்டும் ஸ்தாபித்தல். விசேடமாக உயர்மட்டத்தில் இலவசக் கல்விக்கும், இலவச சுகாதாரச் சேவைக்கும், சகல பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துதல். 

* துரிதமாக மாற்றமடையும் உலகச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் இளம் பரம்பரைக்கு வலுவூட்டுதல். குறிப்பாக, உயர்மட்ட தொழில்வாய்ப்புகளுக்கு இளைஞர் சமுதாயத்தைத் தயார்படுத்த அவசியமான தொழில்நுட்ப அறிவையும் ஏனைய திறன்களையும், பயிற்சியையும் வழங்குதல். 

* சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கெளரவத்துடனும், சமசந்தர்ப்பத்துடனும் வாழ்வதை உறுதிசெய்தல். 

* நாகரிகமான / நெறிமுறை சார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும், விசேடமாக அறிவு துரித வீழ்ச்சியை அடைந்துள்ள எமது நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை மேம்படுத்துதல். 

மேற்கூறிய பொதுமக்கள் நிகழ்ச்சிநிரலை அமுலாக்குவதற்கு எம்மை அர்ப்பணிப்போம் என கீழே கையயாப்பமிடும் அரசியல் கட்சிகள், அரசியல் குழுக்கள் மற்றும் பிரஜைகள் அமைப்புகளுடன் இணைந்து திடசங்கற்பத்துடனும் சபதம் செய்கிறோம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►