blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, August 17, 2014

தமிழர் - முஸ்லிம்கள் - மலையகத் தமிழர்கள் ஒன்றுபடுவது இன்று காலத்தின் கட்டாயம்!

தமிழர் - முஸ்லிம்கள் - மலையகத் தமிழர்கள் ஒன்றுபடுவது இன்று காலத்தின் கட்டாயம்! அழைப்பு விடுக்கிறார் அமைச்சர் சேகு தாவூத்"தமிழ்ப் பேசும் மக்களாகிய வடக்கு, கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய முத்தரப்பினரும் அரசியல் ரீதியாகக் கட்டாயமாக ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த ஐக்கியத்துக்கான முன்னெடுப்புக்களை முஸ்லிம் தலைமைகளே மேற்கொள்ள வேண்டும்." - இவ்வாறு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையேயான ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத்.

தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பல தரப்பினரையும் சந்தித்துப் பேசி வரும் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், இன்று மாலை யாழ். நகரில் வைத்து 'மலரும்' இணையத்துக்கு செவ்வி ஒன்றை அளித்தார்.

அப்போதே இவ்வாறு ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்தார் அவர். அந்த ஐக்கியத்துக்கான முன்நகர்வுகளை முஸ்லிம்களின் தலைமையே - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையே - முன்னெடுக்க வேண்டும். அதற்கான நியாயப்பாடும், கடமையையும் அவர்களையே சாருகின்றது என்று குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் அவர் விவரித்தார்.

தனித்தனியே தனித்துவம் பேசி, தேசியம் உரைத்து, உரிமைக்குரல் எழுப்பி, சிறுபான்மை இனங்களான நாம் நலிவடைந்து விட்டோம். மதவாதம் அரசியலுக்குள் நேரடியாக ஊடுருவி நிலைமையை மேலும் மோசமுற வைத்துவிட்டது.

இன ரீதியாக ஒன்றுபட்டு குரல் எழுப்பப் போகின்றோமோ அல்லது மத ரீதியாகப் பிளவுபட்டு முரண்படப் போகின்றோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிய வேளையும் - வேலையும் - வந்துவிட்டது. சிறுபான்மையினத்தவர்களான நாங்கள் முத்தரப்பினருமே இன்று தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் ஓர் அடிப்படையைக் கொண்டவர்கள்.

பாதிக்கப்பட்ட - பாதிக்கப்பட்டு வருகின்ற - மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்தில் சிக்கியுள்ள - தரப்பினர்கள் என்ற முறையிலும் நமக்கு மத்தியில் ஒரு பொது நிலைமை உள்ளது. இதனைப் புரிந்து கொண்டு விரைந்து நாம் காரியமாற்ற வேண்டும். எமக்குள் ஐக்கியப்பட்டு செயற்பட்டால் மட்டும் எங்கள் தனித்துவத்தையும், வரலாற்று அடையாளங்களையும், பாரம்பரிய விழுமியங்களையும் - ஏன் நம் இனங்களின்இருப்பையே - நாம் தக்க வைக்க முடியும் என்றாகி உள்ளது. எமக்குள் ஐக்கியப்படுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

ஒன்று - இப்போது முத்தரப்பினராகிய இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று தமிழ்ப் பேசும் குழுமங்களையும் தலைமை வகித்து வழி நடத்தும் தலைமைகள் அதனைச் செய்யலாம்.

அல்லது - மற்றது - அப்படி ஐக்கியப்பட்டு செயலாற்றக்கூடிய புதிய தலைமைகள் இந்த மூன்று இனக் குழுமங்களிடையே இருந்தும் புதிதாகத் தோன்றி அத்தயை ஒற்றுமையை ஏற்படுத்தலாம்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் நம் மத்தியில் இத்தகைய புதிய வீச்சோடும் எழுச்சியோடும் புதிய தலைமைகள் உருவாகியமையை நாம் மறந்துவிடமுடியாது.

அத்தகைய சூழல் ஏற்படாது என்று நாம் கருதவும் முடியாது. அத்தகைய நிலையை ஏற்பட முன்னர், இப்போது இருக்கின்ற தலைமைகளே விபரீத நிலைமையின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு ஐக்கியத்தை உருவாக்க முன்வரவேண்டும். அதுவே புத்திசாலித் தனமானதும் சிலாகிக்கத்தக்கதுமாகும். இலகுவில் சாத்தியப்படக்கூடியதும் கூட. இதில் எந்தத் தரப்பு அரசுக்குள் இருக்கிறது, எந்தத் தரப்பு அரசுக்கு வெளியில் நிற்கின்றது என்று நாம் நோக்கத் தேவையில்லை.

அதனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஐக்கியத்துக்கான - ஒன்றுபட்டு செயலாற்றுவதற்கான - முனைப்பில் நாம் ஈடுபடவேண்டியதுதான் இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்பன நாம் உணர்ந்து கொள்வதுதான் முதலில் அவசியம். இந்த முத்தரப்புக்குள் ஐக்கியத்தை முன்னெடுப்பதற்கான முன்நகர்வுகளை முஸ்லிம் தலைமையே மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு கொண்டவை என நான் கருதுகிறேன்.

அதற்கான அழைப்பையும் முஸ்லிம் தலைமைகளிடம் - குறிப்பாக நான் சார்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடம் - நான் முன்வைக்கிறேன். இலங்கைத் தமிழர்களின் தலைமைகள் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதிவப்படுத்தி அங்கிருந்து செயற்படுகின்றன.

அவர்களின் மக்களின் தாயகமும் அதுதான். அதுபோலவே மலையகத் தலைமைகள் மலையகத்திலும் மேல் மாகாணத்திலும் மக்களைப் பிரதிநிதிப்படுத்தி செயற்படுகின்றன. அவர்களின் மக்களின் தளமும் அதுதான். ஆனால் நாடு முழுவதிலும் மக்களைக் கொண்டு செயல்படுபவை முஸ்லிம் தலைமைகளே.

முஸ்லிம் தலைவர்கள் வடக்கு, கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நாட்டின் பிற பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். உதாரணத்துக்கு நான் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்தவன்.

எமது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மலையகத்தில் - கண்டியிலிருந்து - வந்தவர். அதைப் போலவே பிறபகுதிகளையும் சேர்ந்த தலைவர்கள் முஸ்லிம் தரப்பில் இருக்கின்றார்கள்.

ஆகவே, வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும், மேல் மாகாணத்திலும், நாட்டின் பிற இடங்களிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் தார்மீக் கடமைப்பாடும் பொறுப்பும் தாற்பரியமும் முஸ்லிம் தலைமைகளிடமே - குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடமே - உள்ளது.

எமக்குள் கருத்து வேறுபட்டு நாங்கள் முரண்பட்டிருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என்ற முறையில் நமக்குள் அந்த முரண்பாடுகளை மறந்து செயற்பட வேண்டிய தருணம் இது. எங்கள் மூன்று தரப்பினருக்குமான தீர்வு எது என்பதை நாங்களே முதலில் பேசி நமக்குள் ஓர் அடிப்படையை வகுத்துக் கொள்ளவேண்டும்.

வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கான தீர்வை முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் ஏற்று அதற்காகக் குரல் எழுப்ப வேண்டும். அதுபோல முஸ்லிம்களுக்கான தீர்வுக்காக வடக்கு, கிழக்குத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் குரல் எழுப்பவேண்டும்.

அதுபோலவே மலையகத் தமிழர்களுக்கும் மற்றைய இரு தரப்பும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இந்தியப் படைகள் இங்கு வந்திருந்த சமயம் புலிகள் அவர்களோடு மோதினார்கள்.

அப்போது அந்த இந்தியாவையே தமது வம்சாவளித் தளமாகக் கொண்டிருந்த மலையகத் தமிழர்களின் தலைமைகள், வடக்கு - கிழக்குத் தமிழர்களுக்காக - புலிகளுக்காக - இந்தியத் தரப்புகளுக்கு எதிராகவே பகிரங்கமாகக் கருத்து வெளிப்பட்டு கிளர்ந்தெழுந்து நின்றனர்.

அப்படி குரல் எழுப்ப முடியும் என்றால் இப்போது நாம் ஏன் நமக்குள் ஒருவருக்காக மற்றொருவர் ஒன்றுபட்டு குரல் எழுப்ப முடியாது? பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு, அந்தச் சீற்றத்தால் வேறு வழியின்றி, இன்று ஒவ்வொரு சிறுபான்மைப் பிரதிநிதிகளின் தலைமையும் பேரினவாதத் தரப்பில் எதிரணியில் இருக்கும் பக்கத்தை ஆதரிப்பது பற்றி சிந்திக்கின்றன. இது வேறு நாதியற்ற காரணத்தால் எடுக்கும் அரசியல் வங்குரோத்து நிலைப்பாடாகும்.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைமைகளோ அல்லது மலையகத் தமிழர்களின் தலைமைகளோ அல்லது முஸ்லிம்களின் தலைமைகளோ இன்று தனித்து நின்று தத்தமது இனத்துக்கான அரசியல் உரிமைகளுக்காகப் பேரம் பேசும் வலுவில் இல்லை என்பதுதான் யதார்த்தமும் உண்மையுமாகும்.

அதனால் ஒன்றில் சரணாகதி அரசியல் அல்லது எதிர்ப்பு அரசியல் என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவை வேறு வழியின்றி தள்ளப்படுகின்றன.

அதிலிருந்து விடுபட்டு சரியானதைச் செய்வதற்கான - தீர்க்கமான அரசியலை தெளிவான சிந்தனையோடு முன்னெடுப்பதற்கான - வலிமை பெறவேண்டுமானால் அதற்கு நாங்கள் முத்தரப்பினரும் ஐக்கியப்பட்டு அதன் மூலம் வலிமை பெறுவது ஒன்றே இன்றுள்ள ஒரே மார்க்கமாகும்.

ஐக்கியப்பட்டு, வலிமை அடைந்த பின்னர் யாரை எதிர்ப்பது, யாரை ஆதரிப்பது, யாருடன் பேரம் பேசுவது, யாருடன் மோதுவது என்று எமக்குச் சரியெனப்பட்ட வழியில் நாம், நமது விருப்பப்படி தீர்மானம் எடுக்கலாம்.

அதை விடுத்து, வேறு வழியின்றி அரசுப் பக்கம் சாய்ந்து சரணாகதி அரசியல் செய்வதோ அல்லது வேறு மார்க்கமின்றி எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்பதற்காக எதிரணிப் பக்கம் சாய்வதோ புத்திசாதுரியமானதல்ல.

ஐக்கியப்பட்டு, வலிமை அடைந்து, அதை வைத்துக் கொண்டு பேரம் பேசும் வலுவையும் மேன்மைப்படுத்தி, அடுத்த கட்டத்தை நாமே தீர்மானிப்போம்.

இன்றைய அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தும் கட்டாயங்களுக்குள் சிக்கி சந்தர்ப்பவாத அரசியல் முன்னெடுப்பது சிறுபான்மையினருக்குத் தீமையானதாகவே முடியும். அரசியலுக்குள் மதம் புகுந்த விட்டது.

இன ரீதியான அரசியல் பிளவு, மத ரீதியானதாகவும் மாறுவது ஆபத்தானது. அதற்கு முன்னர் சிறுபான்மையினங்கள் தமக்கான தீர்வைக் கண்டுவிட எத்தனிப்பது காலத்தின் கட்டாயமாகும் ‍ என அவர் மேலும் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.      

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►