blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 12, 2014

இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கைஇந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதைப் போன்று, இந்திய அரசாங்கமும் செயற்பட வேண்டுமென தமிழக விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் காலதாமதமின்றி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையே இலங்கை மீனவர்களின் குடும்பங்களும் எதிர்கொள்ளுமென தமிழக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 103 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடற்றொழில் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதான  இலங்கை மீனவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிஸா  மாநிலங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் 20 படகுகளும் இந்திய படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக லால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

11 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர்கள் நாடு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இந்திய மீனவர்களின் 23 படகுகள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►