blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 14, 2014

காணாமல் போன சிறுவன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுதலை

newsமூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த வவுனியா கல்மடு பாடசாலை மாணவன் இனந்தெரியாதவர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டருகில் கண்ணைக்கட்டி, கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்.
உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் நடக்க முடியாத நிலையில் வீட்டிற்குள் வந்த அந்த மாணவன் தாயாரின் தோளில் மயங்கிச் சரிந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் பெற்றோர் அவரை வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி வீட்டிலிருந்து சந்தையில் விற்பனை செய்வதற்காகப் பயிற்றங்காய் கொண்டு வந்த அவர், அதனை விற்றுவிட்டு, சந்தை வியாபாரி ஒருவரின் கடையருகில் சைக்கிளை நிறுத்திவிட்டு, எதிரில் இருக்கும் புத்தகக் கடையில் கொப்பிகள் வாங்கி வருவதாகச் சென்ற பின்னர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.

இவர் காணாமல் போயிருந்தது தொடர்பில் அவருடைய பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கும், இதுபற்றி கொண்டு வரப்பட்டிருந்தது.

வவுனியாவில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றிலும் சென்று தமது மகனைப் பற்றி அவர்கள் விசாரித்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் மகனிடமிருந்து கிடைத்த அழைப்பில் தான் எங்கோ ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மாணவன் பெற்றோரிடம் கூறியிருந்தார்.

இதனையடுத்து, மகனிடம் இருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கம், அவர் தெரிவித்த விபரங்கள் என்பவற்றையும் வவுனியா பொலிசாரிடம் விபரமாக எடுத்துக் கூறி, மகனை மீட்டுத்தருமாறு தந்தையார் கோரியிருந்தார். இராணுவம் மற்றும் பொலிஸ்  உயரதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து மகன் காணாமல் போயிருப்பது பற்றியும், அவரிடமிருந்து வந்த தகவல்கள் பற்றியும் தெரிவித்து, அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அந்த மாணவனின் தந்தையார் கோரியிருந்தார்.

எனினும், காணாமல் போயிருந்த அந்த மாணவன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே காணாமல் போயிருந்த மகாலிங்கம் ரஜிந்தன் (17) நேற்று வெள்ளிக்கிழமை இரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டருகில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டிருந்தார்.

உரிய உணவின்றி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், மோசமாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் அவருடைய உடலில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது, அவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►