blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 16, 2014

1000 ரயில்களில் கேமரா பொருத்த திட்டம்: ரயில்வே நிர்வாகம் முடிவு

புதுடெல்லி: ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதல் கட்டமாக ஆயிரம் ரயில்களில் புதிதாக இணைக்கப்படும் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தீவிரவாதிகள் ஒவ்வொரு முறை மிரட்டல் விடும் போதும் அவர்களின் இலக்கு ரயிலாகவே உள்ளது. மும்பை தாக்குதலின் போதும் சரி, கடந்த மாதம் சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பிலும் சரி, பாட்னாவில் மோடி கூட்டத்தின் போதும் தீவிரவாதிகள் ரயில் பெட்டிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 இதனால், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள ரயில்வே போலீசாரும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது, முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

அடுத்த கட்டமாக, ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே நகை பறிப்பு, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்க பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் கிருஷ்ணா சவுத்ரி கூறியதாவது: 

ரயிலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் சுமார் ஆயிரம் ரயில்களில் புதிதாக இணைக்கப்படும் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள், பயணிகள் மீதான தாக்குதல்கள், தீவிரவாத சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண கேமராக்கள் உதவுகின்றன. எனவே, ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தற்போது கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் 1000 ரயில்களில் கேமரா பொருத்தப்படும். படிப்படியாக அனைத்து ரயில்களிலும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக திறன் கொண்ட கேமராக்களை குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பொருத்துவதன் மூலம் சமூக விரோத சம்பவங்களை உடனடியாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 3500க்கும் மேற்பட்ட ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றங்கள் குறித்து உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவும், தடயங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும் ரயில்வே போலீசாருக்கு ஸ்மார்ட் போன் வழங்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►