blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 23, 2014

அமைச்சொன்றுக்குள் அத்துமீறி நுழைய பொது பல சேனாவுக்கு அதிகாரமில்லை: ரிஷாட்

அரசாங்க அமைச்சொன்றுக்குள் அத்துமீறி நுழையவோ அங்கு எவரையும் தேடவோ பொது பல சேனாவுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை'
என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமைச்சு   அலுவலகத்திற்குள் இன்று நண்பகல் 12 மணியளவில் திடிரென அத்துமீறி நுழைந்த பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் சிலர்,  மஹியங்கனை வட்டரக்க விஜித்த தேரர் இங்கு உள்ளதாகவும் அவரைக் அழைத்துச்செல்ல வந்தாகவும் கூறி இரண்டு மணித்தியாலங்கள் வரையில் அமைச்சின் வளாகத்தில் இடையூறுகளை விளைவித்தனர்.

'நீங்கள் சொல்லும் தேரர் இங்கு வரவில்லை' என அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்த்தன கூறியபோதிலும், தாங்கள் இங்குள்ள அமைச்சரின் அலுவலகங்களை பார்வையிட அனுமதிக்குமாறு பொது பல சேனா அமைப்பினர் வேண்டினர். அதற்கமைவாக ஒவ்வொரு அறையாக அவர்கள் தேடுதலில் ஈடுபட்டார்கள். இருப்பினும், அவர்கள் தேடிவந்த தேரர் அங்கு இருக்கவில்லை. 

இந்நிலையில், அமைச்சு அலுவலகத்துக்கு கலகமடக்கும் பொலிஸாருடன் உடனடியாக விரைந்த மேல்மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர், அமைச்சின் அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கினர். சுமார் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். அத்துடன் அமைச்சின் முன்வாயில்கள் இரண்டும் எவரும் உட்செல்லவோ வெளியே வரவோ முடியாத வகையில் பொலிஸாரினால் இழுத்து மூடப்பட்டன.

இதனால் இன்று அமைச்சின் பொதுசன சந்திப்புக்காக அலுவலகத்துக்குள் சென்ற பொதுமக்கள் எவரும் வெளியே வர முடியாது சுமார் இரண்டு மணித்தியாலங்களாக அமைச்சுக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.

சுமனதம்ம தேரர் கருத்து

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவராக வெள்ளம்பிட்டிய சுமனதம்ம தேரர் கூறுகையில்,

'வட்டரக்க விஜித்த தேரர், மஹியங்கனையில் இருந்து நேரடியாக அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமைச்சுக்கு வந்துள்ளார். அவர் இங்குதான் இருக்கின்றார். ஆனால் எங்களுக்கு அமைச்சரின் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அல்லது அமைச்சின் சீ.சீ.டி கமராவை கண்காணிப்பதற்கும் எங்களுக்கு அனுமதிக்கவில்லை.

அவர் அமைச்சர் அஸ்ரப் காலம் முதல் முஸ்லிம்களோடு இருந்துகொண்டு பௌத்த மதத்திற்கு இழுக்கு செய்து வருகின்றார். தற்பொழுது இவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனோடு சேர்ந்துகொண்டு முஹம்மத் வட்டரக்க தேராக இருக்கின்றார். இவரை இன்று கண்டுபிடித்து அவரது மஞ்சள் சீலையைக் கழற்ற வேண்டும் அல்லது அவரை ஒரு நல்ல பௌத்த தேராக நாங்கள் மாற்ற  வேண்டும்.

அதற்காகவே அவரை பிடித்துக்கொண்டுபோக இங்கு வந்தோம். இந்தத்; தேரர் சில முஸ்லிம்களின் பணத்திற்காக பௌத்தர்களை காட்டிக்கொடுக்கின்றார்' என சுமனதம்ம தேரர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் போது அமைச்சின் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

'அரசாங்க அமைச்சொன்றுக்குள் அத்துமீறி நுழையவோ அங்கு எவரையும் தேடவோ பொது பல சேனாவுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவர்கள் என்னையோ அல்லது அமைச்சின் செயலாளரையே முறைப்படி வந்து சந்திக்க முடியும். இவர்கள் தேடுகின்ற தேரர் இங்கு வரவும் இல்லை. பொது பல சேனாவின் செயற்பாடுகளை நான் மிகவும் கண்டிக்கின்றேன்' என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►