
மதஸ்தலங்களுக்குள்ளும், கல்விக் கூடங்களுக்குள்ளும் இன்றுள்ள கேடுகெட்ட
அரசியல் நுழையக் கூடாது என்பதுதான் நல்ல மனிதர்களின் விருப்பமாகும். ஆனால்,
அரசியல் என்கிற பிராணி தனது மூக்கை – இந்த இரண்டு இடங்களிலும்தான் முதலில்
நுழைக்கத் தொடங்குகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் – அரசியலுக்கான தளமாக பள்ளிவாசலைத்தான் பயன்படுத்தினார்கள். அந்த அரசியலில் நேர்மையும், தூய்மையும் இருந்தது. ஆனால், இன்றுள்ள சாக்கடை அரசியலைப் பேசுவதற்கு டீக்கடைகளும், தெருவோரங்களும் கூட பொருத்தமாக இல்லை!
இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் – அரசியலுக்கான தளமாக பள்ளிவாசலைத்தான் பயன்படுத்தினார்கள். அந்த அரசியலில் நேர்மையும், தூய்மையும் இருந்தது. ஆனால், இன்றுள்ள சாக்கடை அரசியலைப் பேசுவதற்கு டீக்கடைகளும், தெருவோரங்களும் கூட பொருத்தமாக இல்லை!
இப்படிப்பட்ட அரசியலானது – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் அண்மையில் நுழைந்து துள்ளி விளையாடிய கதை குறித்தும், அதனோடு தொடர்பான சில கூத்துக்கள் குறித்தும் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
தெ.கிழக்கு பல்கலையும், தே.கா. அரசியலும்!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 05 ஆம் திகதியன்று பொறியியல்
பீடம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, கட்டிடங்கள் சிலவும் திறந்து
வைக்கப்பட்டன. மேற்படி கட்டிடங்களை நிர்மாணிப்பதற்குரிய கோடிக்கணக்கான
நிதியினை குவைத் அரசாங்கம் வழங்கியிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழை தெ.கி.பல்கலைக்கழக நிருவாகம்
அச்சிட்டிருந்தது. இதனூடாகத்தான், அரசியலும் தனது மூக்கினை நுழைத்தது.
சரியாகச் சொன்னால், அரசியல் தானாக வந்து இங்கு நுழையவில்லை. அரசியல் என்கிற பிராணியின் கழுத்தில் கயிற்றினைக் கட்டி இழுத்து வந்து பல்கலைக்கழகத்துக்குள் துள்ளிக் குதித்து விளையாட விட்டனர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினர்!
அதாவது, இந்நிகழ்வினை வைத்து – அமைச்சர் அதாஉல்லாவையும், அவரின் தேசிய காங்கிரஸ் கட்சியினையும்
பல்கலைக்கழகத்துக்குள் அதன் நிருவாகத்தினர் அழைத்து வந்து விட்டார்கள்
என்று விசனம் தெரிவிக்கின்றார்கள் அரசியல் சார்பற்ற அங்குள்ள ஊழியர்கள்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு பற்றிய அழைப்பிதழில்
அதிதிகளாக
சிலரின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றில் அம்பாறை மாவட்டத்தைச்
சேர்ந்த இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர் மட்டுமே இருந்தன. ஒருவர்
அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மற்றவர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை.

அம்பாறை மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஷ்துள்ள இரண்டு அமைச்சர்கள்
உள்ளனர். ஒருவர் சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரட்ண மற்றவர் அதாஉல்லா. அவர்கள்
இருவரின் பெயர்களும் அழைப்பிதழில் இருந்தன. ஆனால், அம்பாறை மாவட்டத்தில்
கிழக்கு மாகாணசபையைச் சேர்ந்த 03 அமைச்சர்கள் உள்ளனர். ஒருவர் தேசிய
காங்கிரசைச் சேர்ந்த உதுமாலெப்பை, மற்றவர் மு.காங்கிரசைச் சேர்ந்த
எம்.ஐ.எம். மன்சூர், அடுத்தவர் ஆளும் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த விமலவீர
திஸாநாயக்க.
விடயம் இப்படியிருக்க, உதுமாலெப்பையின் பெயரை மட்டும் பல்கலைக்கழ நிருவாகம் தனது அழைப்பிதழில் சேர்தமையானது பக்கச்சார்பான அரசியல் செயற்பாடாகும் என்பதுதான் பல தரப்புக்களினதும் குற்றச்சாட்டாகும்.
இதேவேளை, ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று (அமைச்சர்கள்
தவிர) முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மூன்று பேரும், ஆளும்
ஐ.ம.சு.முன்னணியினைச் சேர்ந்த இருவரும் அம்பாறை மாவட்டத்தில் உள்ளனர். பதவி
நிலை அடிப்படையில், மாகாணசபை அமைச்சர் ஒருவரை விடவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயர்ந்தவர்.
அந்தவகையில் பார்த்தாலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற
உறுப்பினர்களைத் தவிர்த்து விட்டு, மாகாணசபை அமைச்சர் ஒருவரை
முன்னுரிமைப்படுத்தி, அவரின் பெயரை அழைப்பிதழில் சேர்த்தமைக்கு அரசியல்
தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் அதாஉல்லா மற்றும் உதுமாலெப்பை ஆகியோரின் பெயர்கள் அழைப்பிதழில்
சேர்க்கப்பட்ட அதேவேளை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மு.காங்கிரசின்
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை அமைச்சர்
மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோரின் பெயர்கள் அழைப்பிதழில்
திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதாக மு.கா. தரப்பினர் கூறுகின்றனர்.
இவ் விவகாரத்தினை ஜனாதிபதியின் கவனத்துக்கு மு.கா. தலைவர் ஹக்கீம்
கொண்டு சென்றார். இதனையடுத்து, குறித்த நிகழ்வுக்கு வருமாறு மு.கா. தலைவரை
ஜனாதிபதி அழைத்தார். அதனால், ஹக்கீமும் அந்த நிகழ்வுக்கு வருகை
தந்திருந்தார்.
நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளபோது, ஜனாதிபதியிடம் மு.கா. தலைவர் இந்த விடயத்தினைத்தானா அள்ளிக் கொண்டு போனார் என்பதை நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும், உண்மை அதுதான்!
ஹக்கீமைப்
போல், அழைப்பிதழில் பெயர் இல்லாமல் விட்டாலும் ஜனாதிபதியிடம் முகத்தைக்
காட்டிவிட வேண்டும் என்பதற்காக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுந்தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களில் ஏராளமானோர் –
குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
இது மட்டுமன்றி, ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வின் போது, பதவி நிலை குறித்த நெறி முறையின்
(protocol) அடிப்படையில் ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், சரத்வீரசேகர, ஏ.எச்.எம். அஸ்வர்
உள்ளிட்டோர் பின் வரிசையில் அமர்ந்திருக்க, கிழக்கு மாகாணசபை அமைச்சர்
எம்.எஸ். உதுமாலெப்பை போன்றோருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கீடு
செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் – சில காலங்களுக்கு முன்னர் குவைத் நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றிய ஏ.ஆர்.எம். மன்சூர் கலந்து கொள்ளாமையும்
பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தெ.கிழக்குப்
பல்கலைக்கழகத்துக்கு குவைத் அரசாங்கத்திடமிருந்து ஆயிரக் கணக்கான கோடி
ரூபாய்களை நிதியாகப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏ.ஆர்.எம். மன்சூர்
பிரதானமானவராக இருந்தார். குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக அவர்
கடமையாற்றியபோது, ‘குவைத் நிதிய’த்திடம் பேசி, குறித்த நிதியினைப் பெற்றுக்
கொடுக்க உதவினார். அவ்வாறான ஒருவரின் பெயர் அழைப்பிதழில் இல்லை என்பதும்,
நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாமையும் – ‘தவிர்க்க முடியாத’ பல்வேறு
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வர் – ரஹ்மத்
மன்சூர் என்பவர், மு.காங்கிரஸ் பிரமுகர் என்பதும், நீதியமைச்சர் ரஊப்
ஹக்கீமின் இணைப்புச் செயலாளராக அவர் பதவி வகிக்கின்றமையும் இங்கு
சுட்டிக்காட்டத்தக்கது.
இவை எல்லாவற்றிலும் உச்சபட்ச பகிடி ஒன்று உள்ளது. ‘ஜனாதிபதி வருகை தந்த
நிகழ்வை, தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினர் நடுநிலை தவறியும்,
அமைச்சர் அதாஉல்லாவுக்கும், தேசிய காங்கிரசுக்கும் சார்பாக நடத்தி முடித்து
விட்டார்கள் எனவும் வெளியில் ஒரு பார்வை இருக்கிறது. இது குறித்து உங்கள்
கருத்தென்ன?’ என்று தெ.கி.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.
இஸ்மாயிலிடம் கேட்டோம். ‘இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்‘ என்று பொடுபோக்குத்தனமாக பதில் சொன்னார்!
புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் கலாசாரம்!
இவை ஒரு புறமிருக்க, ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வின்போது சிங்கள
மற்றும் தமிழ் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடனங்கள் மேடையேற்றப்பட்டன.
அவை பாராட்டுக்குரியவை. சர்வ மதங்களின் ஒற்றுமையை வலியுத்தும் வகையில் அந்த
நடனங்கள் அமைந்திருந்திருந்தன. ஆனால், முஸ்லிம்களின் கலாசாரத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் எந்தவொரு கலாசார நிகழ்ச்சியும் மேடையேற்றப்படாமையானது
– அங்கு வந்திருந்தோரால் பாரியதொரு குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்தனைக்கும் தெ.கி.பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை பீடமொன்றும் உள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழகத்துக்கு நிதி வழங்கிய – குவைத் நாட்டின் முஸ்லிம்
பிரதிநிதியொருவரும் இந்த நிகழ்வுக்கு அதிதியாக வருகை தந்து, நிகழ்ச்சிகளைப்
பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தெ.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஒரு தமிழராக அல்லது
சிங்களவராக இருந்திருந்தால் – முஸ்லிம்களின் கலாசாரத்தினைப் பிரதிபலிக்கும்
நிகழ்வு மேடையேற்றப்படாமை குறித்து – இந்நேரம் ஆயிரத்தெட்டுக்
குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழகத் தரப்பினரே கிளம்பி விட்டிருப்பார்கள்
என்பதையும் இங்கு சொல்லி வைக்க வேண்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில்
மேடையேற்றப்பட்ட
கலாசார நிகழ்வுகள் வெளியிலிருந்து வந்த பாடசாலை மாணவர்களுடையவையாகும்.
தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் திறமையினை அல்லது சிறப்பினை வெளிப்படுத்தும்
எந்தவொரு நிகழ்வும் இதன்போது மேடையேற்றப்படவில்லை. இதுகுறித்து ஜனாதிபதியே கவலையுடனான கிண்டலை தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.
‘நடனம் நன்றாக இருந்தது. நடனத்தை வழங்கியோர் பல்கலைக்கழக மாணவர்கள்
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், வெளியிலிருந்து வந்த பாடசாலை
மாணவர்களே இந்த நடனத்தை வழங்கினார்கள் என்று இங்கு கூறப்பட்டபோது
ஏமாற்றமும் கவலையுமடைந்தேன்.

இவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தில் இவ்வாறான கலை நிகழ்ச்சியொன்றை வழங்குவதற்குரிய மாணவர்கள் இல்லாமல் போனமையானது ஏமாற்றமளிக்கிறது‘ என்கிற பொருள்பட ஜனாதிபதி பேசினார்.
நம்பிக்கையற்ற நிதிச் செயற்பாடுகள்
மேற்படி நிகழ்வுக்கு மறுநாளன்று (06ஆம் திகதி) தெ.கி.பல்கலைக்கழகத்தின்
08 ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. உள்வாரி மாணவர்கள் 416 பேருக்கும்,
வெளிவாரி மாணவர்கள் 170 பேருக்கும் இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன.
உள்வாரி மாணவர்களுக்கு காலை நிகழ்விலும், வெளிவாரி மாணவர்களுக்கு பிற்பகல்
நிகழ்விலும் பட்டமளிப்பு இடம்பெற்றன.
இதேவேளை, பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணம் எனக் கூறப்பட்டு – உள்வாளி மாணவர் ஒவ்வொருவரிடமும் தலா 1500 ரூபா அறவிடுவதெனவும், வெளிவாரி மாணவர்களிடம் 2500 ரூபாய்
அறவிடுவதெனவும் பட்டமளிப்பு விழாக் குழு தீர்மானித்திருந்தது.
அந்தவகையில், பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் அணிய வேண்டிய ஆடைகளை
பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக – உரிய தொகையினை மாணவர்கள்
செலுத்தியிருக்க வேண்டும் என நிருவாகத்தினரால் கூறப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் அவ்வாறே தமக்கு விதிக்கப்பட்ட பணத்தொகையினைச்
செலுத்தி விட்டு, பட்டமளிப்பு விழாவன்று அணிய வேண்டிய ஆடையினை
பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்வதற்காகச் சென்றனர். அப்போது, வெளிவாரி
மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினர் கடிதமொன்றை வழங்கினார்கள். அந்தக்
கடிதத்தில், வெளிவாரி மாணவர்களிடமிருந்து பட்டமளிப்பு விழாக் கட்டணமாக 5000 ரூபாவினை
பெற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க, மேலும் 2500
ரூபாவினை மாணவர்கள் தமது சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக செலுத்த
வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கட்டணம்
அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் – வெளிவாரி மாணவர்கள் சிலர் தமது எதிர்பினை
வெளிப்படுத்தினர். அவ்வாறு, எதிர்ப்புத் தெரிவித்தால் பல்கலைக்கழகத்தில்
சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்ளை முகம் கொள்ள நேரும் என்று –
மாணவர்கள் பயமுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது!
இதனையடுத்து, வெளிவாரி மாணவர்கள் சிலர் – நம்மைச் சந்தித்து
இவ்விவகாரத்தினை ஊடகங்களில் வெளியிடுமாறு வேண்டினார்கள். இதனை
நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் வழங்கினார்கள். இதற்கிணங்க, இவ் விடயம்
குறித்து தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலை தொலைபேசியில்
தொடர்வு கொண்டு நாம் பேசினோம். மாணவர்களிடம் இவ்வாறு மேலதிக பணம் அறவிடப்படுகின்றமை குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிடப் போவதாகக் கூறினோம்.
ஆனால், இது குறித்து தனக்கு முழுமையான விபரம் தெரியாது என்றும்,
உரியவர்களுடன் பேசி விட்டு பதிலளிப்பேன் என்றும் உபவேந்தர் கூறினார்.

அதனையடுத்து, மேலதிகமாக மாணவர்களிடம் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்திருந்த 2500 ரூபாவினை அறவிடுவதில்லை என்று வெளிவாரிப் பட்டப்படிப்புப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எம்.எம். முஸ்தபா நம்மிடம் உறுதி வழங்கினார்.
இதனை நம்மைச் சந்திக்க வந்திருந்த மாணவர்களிடம் தெரியப்படுத்தினோம்.
அவர்களுக்கு அது ஆறுதலான செய்தியாக இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தினரின்
நடத்தையானது நமக்கு ஆச்சரியத்தினை அளித்தது. பல்கலைக்கழக நிருவாகத்தினர்
விரும்பினாற்போல், விரும்பிய தொகையை மாணவர்களிடம் அறவிடுவதும், அது
குறித்து கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுப்பப்படும் போது, பணம்
அறவிடுவதைக் கைவிடுவதும் பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய செயற்பாடுபோல்
தெரியவில்லை.
நிதி விவகாரங்களில் ‘வட்டிக் கடைக்காரர்களைப்போல்’ ஒரு பல்கலைக்கழக நிருவாகம் செயற்பட முடியாது.
வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்புக் கட்டணம் தொடர்பில் ஓர்
ஊடகவியலாளராக நாம் கேள்விகளை எழுப்பிருக்கவில்லையென்றால் வெளிவாரி
மாணவர்களிடமிருந்து தெ.கி.பல்கலைக்கழகம் 04 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயினை (2500×170) மேலதிகமாகச் சுருட்டியிருக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, பட்டமளிப்பு விழாவின் போது – பல்கலைக்கழகத்தால்
அனுமதியளிக்கப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடம் 02 புகைப்படங்களைப்
பிடித்துக் கொள்ளுமாறும், பட்டமளிப்பு விழாவின் ஒளிப்பதிவுகள் (வீடியோ)
அடங்கிய இறுவட்டு (டி.வி.டி) ஒன்றினை பெற்றுக் கொள்ளுமாறும் பல்கலைக்கழக
நிருவாகத்தினரால் மாணவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதற்கென ஒவ்வொரு
மாணவரிடமிருந்தும் 1100 ரூபாய்
கட்டணமாகவும் அறவிடப்பட்டுமுள்ளது. யாரோ ஒரு ஸ்ரூடியோகாரரிடம் ‘இத்தனை
போடோக்களை நீங்கள் எடுத்தே ஆகவேண்டும்’ என்று, பல்கலைக்கழக நிருவாகத்தினர்
வற்புறுத்தியமைக்குப் பின்னணியில் வர்த்தக நடத்தைகள் இல்லாமலிருக்க
முடியாது!
இது விடயத்திலும் மாணவர்கள் தமது அதிருப்தியினைத் தெரிவித்துள்ளார்கள்.
‘பட்டமளிக்கும் போது, மேடையில் வைத்து ஒரு புகைப்படம் எடுத்தால் மட்டும்
எமக்குப் போதுமானதாகும். மேலதிகமாக புகைப்படங்கள் பிடிக்க வேண்டும் என்கிற
விருப்பமுள்ளவர்கள் பிடித்துக்கொள்வார்கள்.
ஆனால், அத்தனை மாணவர்களையும்
ஏன் இது விடயத்தில் வற்புறுத்த வேண்டும்?’ என்கிற மாணவர்களின் கேள்விக்கு
தெ.கி.பல்கலைக்கழக நிருவாகம் பதில் சொல்லியே ஆகவேண்டும். மேற்படி
கணக்கிற்கிணங்க, ஒரு புகைப்படத்துக்கு 300 ரூபாயினைக் கழித்து விட்டுப்
பார்த்தாலும் – பட்டம் பெற்றுக் கொண்ட 586 மாணவர்களிடமிருந்தும் மேலதிகமான ஒரு புகைப்படம் மற்றும் டி.வி.டி ஆகிவற்றுக்காக 04 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் (586×800) வற்புறுத்தலின் பேரில் மேலதிகமாக அறவிறப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வயதினை வைத்துப் பார்த்தால்,
அது
– தவழுகின்ற ஒரு குழந்தையாக இருந்து, இப்போதுதான் தத்தித் தத்தி
நடக்கப்பழகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பல்கலைக்கழக
நிருவாகத்தினரின் ‘கோல்மால்களும்’ பொடுபோக்குத் தனங்களும் அந்தக் கல்விக்
கூடத்தின் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்து விடக்கூடாது என்பதை நாம்
மிகவும் பொறுப்புணர்வுடன் கூறிவைக்க விரும்புகின்றோம்.

இந்தப் பல்கலைக்கழகம் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் ஏராளமுள்ளன. அதற்குத் தேவையானது – ஆக்கபூர்வ உழைப்பே தவிர அரசியல் அல்ல!
அரசியல் என்கிற பிராணி ஆபத்தானது. அதனிடமிருந்து கல்விக் கூடங்களை தூரமாக வைத்துக் கொள்வதுதான் எல்லோருக்கும் ஆரோக்கியமானது!!
No comments:
Post a Comment
Leave A Reply