சட்டத்தை
மீறி நடந்து கொள்ளும் பொதுபல சேனாவின் போக்குகளுக்கு ஒரு வித ஆசீர்வாதம்
இருப்பதைப் போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. இது முஸ்லிம் மக்கள்
மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாகவும்
அமைந்துள்ளது.
எனவே, இது தொடர்பான சந்தேகங்களைப் போக்கி, சமூகங்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் தார்மிகக் கடமையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பான சந்தேகங்களைப் போக்கி, சமூகங்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் தார்மிகக் கடமையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் மக்களை
அச்சுறுத்தும் வகையிலும், கீழ்த்தரமானவையாகவும் அமைந்துள்ளன. முஸ்லிம்
மக்களால் போற்றப்படும் புனித குர்ஆனை அவமதிக்கும் வகையில் நடந்து
கொள்கின்றனர். இவ்வாறானவர்களின் நாகரிகமற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்
சட்ட ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றும் அமைச்சர்
ஹக்கீம் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துக்களை அடுத்து, பகிரங்க
விவாதாத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீமுக்கு பொதுபலசேனா விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் கருத்து
வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் வீரகேசரிக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் முஸ்லிம்
மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்று பலரும்
கூறுகின்றனர். இந்த நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் மாத்திரமே வாழ வேண்டும்
என்ற ஓர் சிந்தனையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதுமாத்திரமன்றி, தான் தோன்றித் தனமான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் அவர்கள்
ஈடுபடுகின்றனர். புனித குர்ஆனை அவர்கள் இழிவுபடுத்துகின்றனர். இது முஸ்லிம்
மக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறான தீவிரவாதப் போக்குடைய
அமைப்புக்களுடன் நான் விவாதத்தில் கலந்து கொள்ள ஒருபோதும் சம்மதிக்கப்
போவதில்லை. அதுவே அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும் அமைந்துவிடும்.
அவர்களின் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை இதர பௌத்த குருமாரும் ஏற்றுக்
கொள்ளவில்லை. இந்த குழுவினருக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பொலிஸார்
தயக்கம் காட்டக் கூடாது.
இவர்கள் சட்டத்துக்கு எதிரான
நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் அதனைத்
தட்டிக் கேட்க வேண்டும். காவியுடையுடன் இவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளும்
போது கூட்டத்தி்ன் பாதுகாவலர்கள் தயக்கம் காட்டு நிலை காணப்படுகின்றது.
இவர்கள் எவரது அனுக்கிரகமும் இன்று தன்னிச்சையாகவே செயற்படுகின்றார்கள்
என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தார்மீகக் கடமை இன்று
ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி
எறியப்பட வேண்டும். அண்மையில் நான் மல்வத்த அஸ்கிரிய ராமனிய மாநாயக்க
தேரர்களை சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் பொதுபல சேனாவின்
நடவடிக்கைகளை ஒரு போதும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்கள்.
பௌத்த மதகுருமார் ஒரு போதும் உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது என்று எடுத்து
விளக்கினார்கள். அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் ஒரு போதும்
நல்லிணக்கத்துக்கு வழிசமைக்காது என்றும், குந்தகத்தையே ஏற்படுத்தும்
என்றும் தெரிவித்தார்கள்.
முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு வகையிலும்
ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அவர்களிடம் நான் எடுத்துக் கூறினேன்.
அதேவேளை பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை தாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப்
போவதில்லை என்றும் பௌத்த பீடாதிகள் தெரிவித்தனர். இவ்வாறு நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.-வீரகேசரி
No comments:
Post a Comment
Leave A Reply