blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 25, 2014

யாழில் பொலிஸார் பக்கச்சார்பாக நடக்கின்றனர்

யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸாரிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், அதனை பொலிஸ் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லையென  வடமாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் பொதுமக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவினர் இன்று (24) தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யச் செல்லும் போது பொலிஸார் பாராமுகங் காட்டுவதுடன், ஒரு தலைப்பட்சமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

அதன்படி, வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு, யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேனாவிற்கு பொலிஸ் உத்தியோதர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.

அண்மையில், சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் கணவனும் மனைவியும் அயல் வீட்டுக்காரர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டதில் கணவன் தலையில் படுகாயம் அடைந்த நிலையிலும், மனைவி கை முறிந்த நிலையிலும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த 15ஆம் திகதி அயலவர்கள் தம்முடன் சண்டை போட்டு தம்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களின் முறைப்பாட்டினை பதிவு செய்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்தினால், பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு சார்பாக பேசியதுடன், தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் மனைவியினை அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர், தாக்குதல் மேற்கொண்ட 5 பேரும், குறித்த கணவன் மனைவியினை கேலி செய்து வந்துள்ளதுடன், அவர்களுக்குச் சொந்தமான காணியில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தினை உடைத்துள்ளனர்.

மோட்டார் இயந்திரம் உடைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு 3 முறை முறைப்பாடுகள் பதிவு செய்த நிலையில் பொலிஸார் குறித்த தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால், தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என தேசிய ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரி, யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இவ்வாறான பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை நியாயத்துடன் நடத்தாவிட்டால், பொலிஸாருக்கும் மக்களுக்கும் நெருக்கம் குறைந்து விடும் என்பதுடன், ஒரு பக்கம் சார்பாக விசாரணை செய்வது தவறு ஆகும்.

அனைவரும் சமம் என்ற வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொலிஸாரின் தவறுகளை பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆவண செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழுவினர் கூறினார்கள்.

இவ்வாறு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லையென தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினர் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►