இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை நீடிக்கின்றமைக்கு காங்கிரஸ் கட்சி
தலைமையிலான அரசாங்கமே காரணம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம்
சுமத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுபுள்ளி
வைக்கப்படவேண்டும் என தெரிவித்து இந்திய பிரதமருக்கு அன்றாடம் கடிதம்
எழுதினாலும் தமக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அவர்
தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே தமிழக முதல்வர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக
மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாகவும் செயற்பட்ட
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தற்போது மீனவர்களுக்காக
நீலிக்கண்ணீர் வடிப்பதாக ஜெயலலிதா ஜெயராம் கூறியுள்ளார்.
தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரச்சினைகளை சந்திப்பதற்கு கச்சதீவு
உடன்படிக்கை பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதாக தி
ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் உடன்படிக்கையொன்றின் மூலம்
கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்த காங்கிரஸ் கட்சி, மீனவர் பிரச்சினைக்கு
பொறுப்புகூற வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு
நாடுகளினதும் அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என
கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த
மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான
பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறும் என தமிழக அதிகாரிகள் ஏற்கனவே
அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் இலங்கைக்கு இதுவரை
எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வழங்கப்படவில்லை என கடற்றொழில் அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply