பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறு கோரி காத்தான்குடி நகர சபை தலைவர்
எஸ்.எச்.அஸ்பரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பி
வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத் நேற்று புதன்கிழமை (23) அனுப்பி
வைக்கப்பட்டதாக நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பொது பல சேனா எனும் பௌத்த தீவரவாத அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இந்த அமைப்பை இலங்கையில் தடை செய்ய வேண்டும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை குழப்புவதிலும், சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் பொது பல சேனா அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் ஐக்கியத்தையும், சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள சமகாலத்தில், இலங்கையின் இறைமைக்கு எதிராகவும், தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராகவும் இந்த பொது பல சேனா எனும் பௌத்த தீவிரவாத அமைப்பான செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பொது பல சேனா அமைப்பு செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய பிரசார அமைப்புக்களாக செயற்பட்டு வரும் தஃவா அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரித்து முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நாட்டில் எந்தவொரு இஸ்லாமிய பிரசார தஃவா அமைப்பும் இலங்கையின் இறைமைக்கு எதிராகவோ அல்லது இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராகவோ செயற்படவில்லை. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்தே எப்போதும் செயற்பட்டு வந்துள்ளனர்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். இலங்கைப் படையில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
வெளிநாட்டு சக்திகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டு வரும் இந்த பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறு காத்தான்குடி நகர சபையின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்' என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதியொன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply