blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 11, 2015

பெண் ஏன் சிறந்தவள்? அறிவியல் சொல்லும் 10 விஷயங்கள்

மாறும் என்பதைத் தவிர மற்ற எல்லாமே மாறிக் கொண்டிருந்தாலும், மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை.


பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை அவ்வப்போது கேட்க முடிகிறது. ‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும் பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல் மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன்.

என்ற பாரதியார் வாக்கை அழுத்தம் திருத்தமாக வழிமொழிகிற அ‘மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும்’ சோக் தாமோதரன், ‘உன்னை மாதிரி வருமா’ என ஐஸ் வைக்கிற சமாசாரமாக இல்லாமல், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், அறிவியல் ரீதியாக பெண்களிடம் இருக்கும் சிறப்பான 10 விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

கல்விக்கு அதிபதி!

10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். பெரும்பாலும் முதல் இடம் பிடிப்பவர்கள் மாணவிகளாகவே இருப்பார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஒரு பெண் தெய்வம் என்ற காரணமாக இருக்கலாம் என்று வேடிக்கைக்காகச் சொன்னாலும், அதையும் தாண்டி பல விஷயங்கள் பெண்களிடம் உள்ளன. படிக்காவிட்டால் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற விழிப்புணர்வும், தொலைநோக்குப் பார்வையும், பெற்றோரின் சிரமமும் சேர்ந்து கூடுதல் அக்கறையை பெண்களிடம் உண்டாக்கிவிடுகிறது. மாணவர்களைப்போல விளையாட்டுத்தனமோ, கவனச்சிதறலோ மாணவிகளிடம் இல்லை என்பதும் கூடுதல் பலம். மாணவிகள் கல்வியில் முன்னணியில் இருப்பதன் ராஜ ரகசியம் இதுதான்!

வேலைக்கு நாங்க கியாரன்டி!


ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால், அந்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பது ஆண்களின் திறன் என்றாலும், அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் வேலையில் கவனம் இருக்காது. பெண்கள் வேலையையும் தனிப்பட்ட பிரச்னைகளையும் குழப்பிக் கொள்வதில்லை. அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வருவதிலும் பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள். அடிக்கடி டீ சாப்பிடுவதற்கு, புகைப் பிடிப்பதற்கு வெளியில் செல்கிற பழக்கமும் ஆண்களிடம் இருக்கும் பெரிய மைனஸ். பெண்களிடம் இதுபோன்ற குறைபாடுகள் இல்லை.

ஆரோக்கியம் பழகு!


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்றாற் போல உடலை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை பெண்களிடம் இயல்பாகவே உண்டு. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மது, புகை, பாக்கு வகைகள் என்று உடலைக் கெடுத்துக் கொள்ளும் தீய பழக்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கே இருக்கிறது. இந்தப் பழக்கங்கள் இருப்பவர்களை ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு பெண்கள் உடல்நலக்கேடான பழக்கங்களை வெறுக்கிறார்கள்.

பாதுகாப்பான பயணம்


ஆண்கள் மரபு ரீதியாகவே போட்டியிட்டு வெல்லும் குணாதிசயம் கொண்டவர்கள். சாகசம் செய்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். துரதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு எமனாக அமைவதே இந்த போட்டி மனப்பான்மையும் சாகச உணர்வும்தான். பெண்கள் அப்படி உயிரைப் பணயம் வைத்து வாகனம் ஓட்டுவதில்லை. ஆனால், விரைவாகவும் முறையாகவும் வாகனங்களை இயக்குவதில் திறமை கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே பெண்களால் ஏற்படும் சாலை விபத்துகள் குறைவாகவே இருக்கின்றன.

பெண்கள் ஏன் அழகாக இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு ‘நீங்கள் ஆண்களாக இருப்பதால்...’ என்று பதில் சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணிடம் பொறாமை கொள்வதும், ஆசைப்படுவதெல்லாம் ஏன்? பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவர்கள் என்பதைப் போலவே பேரழகுக்கு சொந்தக்காரர்களாகவும் பெண்களே இருப்பதை, ஆண்களே பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வார்கள். ‘மயில், சேவல், சிங்கம் என்று மற்ற உயிரினங்களில் எல்லாம் ஆண் இனத்தை அழகாகப் படைத்த இறைவன், மனித இனத்தில் மட்டும் பெண்களை அழகாகப் படைத்து ஆண்களைக் கிறுக்குப் பிடிக்க வைத்துவிட்டான்’ என்று நடிகர் சிவக்குமார் குறிப்பிட்டது நினைவிருந்தால் இது புரியும்!

மதுரையா? சிதம்பரமா?

வீட்டில் யாருடைய நிர்வாகம் என்பதை ஜாலியாக விசாரிக்கும் இந்தக் கேள்வி முன்பு மிகவும் பிரபலம். பெண்களின் நிர்வாகம் என்றால் மதுரை (மீனாட்சி) என்றும் ஆண்களின் நிர்வாகம் என்றால் சிதம்பரம் (நடராஜர்) என்றும் சொல்லி வந்தார்கள். சிக்கனம், வீட்டுக்கான தேவைகளில் தெளிவு, எதிர்கால சேமிப்பு என்று ஆண்கள் பலவீனமாக இருக்கும் ஏரியாக்களில், பெண்கள் அலட்டிக் கொள்ளாமலேயே ஸ்கோர் பண்ணுகிறார்கள். அதனால்தான், ‘நீயே பாத்துக்கம்மா...’ என்று பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் சரண்டராகி விடுகிறார்கள். நான்கு பேர் பொறாமைப்படுகிற அளவிலோ, பெருமைப்படுகிற அளவிலோ, ஒரு குடும்பம் சிறப்பாக செயல்பட்டு வந்தால், பின்னணியில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே நிஜம்!

சூழலுக்கு ஏற்றாற்போல செயல்படுதல்


Survival of the fittest என்று சூழலுக்கு ஏற்றாற்போல தங்களை வலிமையாக மாற்றிக்கொண்டு தப்பிப் பிழைக்கிற உயிரினங்களைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் குணம் பெண்களிடம் அதிகம் உண்டு. காதல் விஷயத்திலே எடுத்துக் கொண்டால் கூட, காதல் கனிந்து திருமணமாகக் கைகூடுவதில் பெண்களின் மன உறுதியே பெரும்பங்கு வகிக்கிறது.

சூழல் சரிவராத பட்சத்தில் பிரிவை ஏற்றுக் கொள்கிறவர்களும் பெண்கள்தான். காதல் பிரிவில் வலி என்பது ஆண், பெண் இருவருக்கும் ஒரே அளவுதான் என்றாலும், எல்லாவற்றையும் தாண்டி, ‘அடுத்து என்ன’ என்று பெண்கள் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆண்களும் யதார்த்தத்தைப் புரிந்து மாறிவிடுகிறார்கள்தான். ஆனால், அவர்களுக்கு நீண்ட அவகாசம் தேவைப்
படுகிறது.

‘இது சரியா, தவறா’ என்ற விவாதங்களுக்குள் செல்லாமல், யதார்த்தத்துக்கு ஏற்றாற்போல மாறிவிடும் பெண்களின் இந்த குணத்தையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால், ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா’ என்று டாஸ்மாக் பேக்கிரவுண்டில் பாட்டு போடுவதெல்லாம் சில்லி மேட்டரே!

நேருக்கு நேர்!


நேர்முகத் தேர்வுகளில் பதற்றம் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவதிலும், தகவல் தொடர்பிலும், ஆண்களைவிட பெண்களே சிறப்பானவர்கள் என்கிறார்கள் மனித வள மேம்பாட்டுத்துறையினர். இதனால்தான், நேர்முகத்தேர்வின் வெற்றி சதவிகிதத்திலும் பெண்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள். பெண் என்ற காரணத்தால் வேலை கிடைத்துவிட்டது என்று சொல்வதெல்லாம் உண்மையை புரிந்துகொள்ளாத மேலோட்டமான
குற்றச்சாட்டே!

கண்ணீர் நல்லது!


‘ஆண்கள் என்றால் அழக்கூடாது, புலம்பக் கூடாது’ போன்ற சமூக மாயையால் ஆண்கள் பெரும்பாலும் பிரச்னைகளை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. ஒரு பிரச்னையை பகிர்ந்து கொண்டால் உதவி செய்கிறவர்களைவிட கேலி செய்கிறவர்கள் அதிகம் என்ற எண்ணத்தாலும் பிரச்னைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. பெண்களுக்கோ பிரச்னை மூட்டைகளை மனதுக்குள் சுமக்கிற பழக்கம் இல்லை. மொழித்திறனும் பெண்களுக்கு அதிகம் என்பதால் மற்றவர்களிடம் அதைப் பேசி மனதை லேசாக்கிவிடுவார்கள். அதனால்தான், ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லை.

வீடும் கட்டிடமும்


ஒரு பெண் காலடி வைத்த பிறகுதான் ஒரு கட்டிடம் வீடு என்ற கௌரவம் பெறுகிறது. இல்லாவிட்டால், அது வெறும் கட்டிடம் மட்டுமே என்று சொல்வதுண்டு. பெண்கள் ஊருக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துத் திரும்பி வந்தால், அந்த வீடு என்ன நிலையில் இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். பேச்சலர்களின் அறைக்கும் பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கும்  இருக்கும் வித்தியாசத்துக்கும் இதுவே அடிப்படை. நான்கு ஆண்கள் இருந்தாலும் விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்பதும் அதற்காகத்தான். அதனால்தான், ‘சக்தி இல்லையென்றால் சிவனே இல்லை’ என்றார்கள்.

ஆகவே, இனி மறந்தும் ‘பொம்பளையாப் பொறக்கக் கூடாது’ என்ற வசனத்தைச் சொல்லாதீர்கள்...

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►