கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படும் முஸ்லிம் சமுகம் அரசியல் என்று வரும் போது மட்டும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுவது சமூகத்தின் எழுச்சிக்காகவா அல்லது வீழ்ச்சிக்காகவா? என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பேச்சாளருமான அஹமட் புர்கான் JP கேள்வியெழுப்பியுள்ளார்.
கட்சி விட்டு கட்சி மாறி சமூகத்தின் காவலர்களாய் கொக்கரிக்கும் முஸ்லிம் தலைமைகள் இந்நாட்டில் பேரினவாதிகளால் முஸ்லிம்களின் மீது இனவாதம் கொப்பளிக்கப்பட்ட போது, அதனை தடுக்க திரானியற்றவர்களாக இருந்தவர்கள் இன்று தங்களுடைய இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்தக் கட்சித் தாவல்களை மேற்கொண்டுள்ளனர் என்பதை காணக் கூடியதாகவுள்ளது.
மாறாக சமூகத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான மாறுதலாக இருக்குமானால் தற்போது பொது வேட்பாளாராக போட்டியிடும் மைத்திரி பால சிறிசேனவுடன் ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல தரப்பட்ட ஒப்பந்தங்களை செய்துள்ளது.
ஆனால் பொது வேட்பாளருடன் அங்கம் வகிக்கும் , வகிக்கப் போகும் முஸ்லிம் தலைமைகளால் முஸ்லிம் சமூகம் சார்பாக முன் வைக்கப்பட்ட நிபந்தனைகள் அல்லது எதிர்கால நடவடிக்கை குறித்து முன் வைக்கப்பட்ட திட்டங்கள் தான் என்ன?
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினமே இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் யாரை ஆட்சி பீடம் ஏற்ற வேண்டுமென தீர்மானித்து விட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது வேட்பாளருக்கான ஆதரவினால் மக்கள் எம்மை மறந்து விடுவார்கள் சமுகத்தினால் அரசியல் அநாதையாக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சமும், வன்னியில் தனக்குப் போட்டியாக ஒருவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் எதிரணியின் பக்கம் மாறிய வடக்கு முஸ்லிம் தலைமையால் கிழக்கில் தன்னுடைய செல்வாக்கை இழப்பது கண்டு எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என்றிருந்த இன்னுமொரு முஸ்லிம் கட்சித் தலைமையின் அதிரடி மாற்றமும் கொப்பு விட்டு கொப்பு பாய்தலானதும் அவர்களுடை சுயநல, சந்தர்ப்பவாத அரசியலையும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கான நகர்வுகளுமே தவிர முஸ்லிம் சமுகத்திற்கான விடியலுக்காக அல்ல என்பதை இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் இவர்களின் சுயநல குறுகிய அரசியல் சிந்தனையால் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு முடிவின்றி கேள்விக் குறியாகவேயுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனவாத அரசியலுக்கும் தீனி போட்டுள்ளார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply