blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, October 18, 2014

பொதுபல சேனா தொடர்பில், ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்து திருப்திகரமான பதிலை எதிர்பார்க்கிறதாம் தவ்ஹீத் ஜமாத்.!

imageகடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும்
பலவிதமான விமர்சனங்களும், இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே.

பொது பல சேனாவின் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும், திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அந்தந்த சந்தர்ப்பங்களில்  ஊடகவியலாளர் சந்திப்புக்கள் மற்றும் பகிரங்க உரைகள் மூலமாக நாம் பதிலளித்து வந்துள்ளோம்.

திருக்குர்ஆன் தொடர்பில் பொது பல சேனாவினால் விடுக்கப்பட்ட பகிரங்க விவாத அறைகூவலையும் எமது ஜமாஅத் சார்பில் பகிரங்கமாக விவாதிக்க ஒப்புக் கொண்டது மற்றுமின்றி, ஏலவே பொது பல சேனாவினால் விடுக்கப்பட்டிருந்த விவாத அறைகூவல்களை மூன்று சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக ஏற்று விவாதத்திற்க நாம் தயார் என்பதை அறிவித்தும் உள்ளோம்.

எம்மால் நடத்தப்பட்ட ஊடகவியல் சந்திப்புக்களில் நாம் வெளியிட்ட கருத்துக்களுக்கோ, அல்லது பகிரங்க உரை மூலமாக நாம் வழங்கிய விளக்கங்களுக்கோ பதிலளிக்க திராணியற்றவர்கள், திருக்குர்ஆன் தொடர்பில் விவாதிக்க நாம் ஒப்புக் கொண்ட பின்னர் கூட அதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், மீண்டும் மீண்டும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை திருக்குர்ஆன் தொடர்பில் பொது பல சேனாவுடன் விவாதிக்க வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றார்கள்.

பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!
உலக மக்களுக்கு நேர் வழி காட்டும், இன்று வரை உலகில் எவராலும் பொய்ப்பிக்கப்பட முடியாத, மறுமை நாள் வரை கலங்கம் சுமத்த முடியாத திருமறைக் குர்ஆன் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என பொது பல சேனாவின் செயலாளர் கருத்து வெளியிட்டு வரும் இந்நிலையில், குறித்த விவாத அழைப்புக்கு எவ்வித பதிலும் தெரிவிக்காமல் உங்கள் அமைப்பு தொடர்ந்தும் அமைதியாக இருப்பது என்பது, பெரும்பான்மை மக்கள் மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு வித சந்தேகத்தை உண்டாக்குவதற்கு வழியாகிவிடும்.

ஆகவே, குர்ஆன் தொடர்பாக பொது பல சேனாவினால் முன்வைக்கப்பட்டு வரும் விவாத அறைகூவலை உலமா சபை பொறுப்பெடுக்கும் படி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ACJU சார்பாக BBS உடன் SLTJ விவாதிக்கத் தயார்!

பொது பல சேனாவினால் திருக்குர்ஆன் தொடர்பில் ACJU வை நோக்கி முன்வைக்கப்பட்டு வரும் பகிரங்க விவாத அழைப்பை உங்கள் இயக்கம் சார்பில் நாம் நடத்தித் தருவதற்கு தயாராக உள்ளோம்.

குர்ஆன் தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா சபைதான் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் உலமா சபை அல்லாத வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் தான் விவாதிக்க வரமாட்டேன் என்று பொது பல சேனாவின் செயலாளர் தொடர்ந்தும் அடம்பிடித்து வருகின்ற காரணத்தினால், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை குறித்த விவாதத்தை ஒப்புக் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களை வைத்து விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விவாதத்தை ஜம்இய்யதுல் உலமா சபை சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர்களை வைத்து சிங்கள மொழியிலேயே மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதினூடாக இலங்கை வாழ் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குர்ஆன் தொடர்பான சந்தேகங்களையும், முஸ்லிம்கள் தொடர்பான தேவையற்ற விமர்சனங்களையும் களைந்துவிட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்து திருப்திகரமான ஒரு பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக்
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►