இராணுவத்தை வெளியேற்றி வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே வட மாகாண
முதல்வர் முயற்சிக்கின்றார். வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்
மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடும் என தேசப்பற்றுள்ள தேசிய
இயக்கம் தெரிவித்தது.
இந்தியாவை நம்பி அரசியல் நடத்தினால் இறுதியில் அழிவது உறுதியென்பதை
அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவ் இயக்கம்
வலியுறுத்தியுள்ளது.
இராணுவத்தை வெளியேற்றுவதே குறிக்கோள் என்ற வடமாகாண முதல்வரின் கருத்து
தொடர்பில் வினவிய போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச
அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் இராணுவத்தை வைத்திருப்பதனால் பொது மக்கள் ஒரு போதும்
பாதிக்கப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பை விரும்பாததன்
காரணத்தினாலேயே இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.
விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் இருப்பதாக கடந்த காலங்களில்
செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கில்
இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது மிகவும் பயங்கரமான விளைவுகளை
ஏற்படுத்தும்.
இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றி விடுதலைப் புலிகளை மீளவும்
ஊக்குவிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றமை திட்டவட்டமாக
தெரிகின்றது. இதற்கு அரசாங்கம் இடம் கொடுத்தால் மீண்டும் ஒரு ஆயுத
யுத்தத்தினை ஏற்படுத்திவிடும்.
மேலும் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தியாவின் அரசியலை நம்பியே
செயற்படுகின்றனர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தொடர்பில் இலங்கை
யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் இலங்கை விடயத்தில் இந்தியாவோ
அல்லது சர்வதேச அமைப்புகளோ தலையிட வேண்டிய தேவையும் இல்லை. குறிப்பாக
இந்தியாவை நம்பி இங்கு ஆட்சி நடத்தினால் இந்தியாவின் சூழ்ச்சி வலையில்
நாமும் சிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply