இலங்கையின் வடமேற்கே மன்னார்
மாவட்டம் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்ற
படையினர் அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின்
விபரங்களைச்
சேகரித்துள்ளதுடன், அவர்களைப் புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.ஆசிரியர் சங்கம் கண்டனம்
இந்தச் சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டித்திருக்கின்றது.
இதுபற்றி கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அமைதி நிலவுகின்ற நேரத்தில் இவ்வாறு பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சமடையச் செய்யும் வகையில் படையினர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பாடசாலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் காரணமாக பாடசாலைச் சூழலில் பதற்ற நிலைமை உருவாகியிருப்பதாகவும் இதனால் அங்கு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
''பாடசாலைகள் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்றுக் கொள்வதே முறையாகும்.
அவ்வாறில்லாமல், பாடசாலைகள் நடைபெறும் நேரத்தில் படையினர் அங்கு சென்று இவ்வாறு நடந்து கொள்வது தவறான காரியமாகும்'' என்றும் அவர் கூறினார்
இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், குறிப்பாக வடமாகாண முதலமைச்சரும் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply